நக்ரோட்டா தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஜம்மு-காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நக்ரோட்டா பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் சென்றுகொண்டிருந்த லாரியை காவல்துறையினர் நிறுத்தினர். அப்போது வாகனத்தில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்கத் தொடங்கினர்.
இதையடுத்து, சிஆர்பிஎஃப் படையினரும், காவல் துறையினரும் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து 11 துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவத்தில் 2 காவலர்கள் காயமடைந்தனர்.
அவர்கள் மும்பை தாக்குதல் போன்ற ஒரு பெரிய தாக்குதல் சம்பவம் நிகழ்த்த வந்துள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகின்றார்.