தற்போதைய செய்திகள்

பவானி காலிங்கராயன் அணைக்கட்டுக்கு 4,482 கனஅடி நீர்வரத்து

17th Nov 2020 06:30 PM

ADVERTISEMENT

பவானி: வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பவானி ஆற்றில் வினாடிக்கு 4,482 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால், நீர்நிலைகள், ஏரிகள், தடுப்பணைகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. இந்நிலையில், கோபி, சத்தி. கவுந்தப்பாடி, அத்தாணி, ஆப்பக்கூடல் மற்றும் பவானி பகுதிகளில் திங்கள்கிழமை பிற்பகலில் தொடங்கி இரவு முழுவதும் விட்டு, விட்டு மழை பெய்தது.

இதனால், ஓடைகள் மற்றும் கால்வாய்களில் பெருக்கெடுத்த மழைநீர் பவானி ஆற்றில் சென்று கலந்து வருகிறது. கனமழை பெய்யும் நிலையில் பவானிசாகர் அணையிலிருந்து ஆற்றில் குடிநீருக்கும், பாசனத்துக்கும் திறக்கப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், பவானி ஆற்றில் கலந்த மழைநீர் காலிங்கராயன் அணைக்கட்டுக்கு செவ்வாய்க்கிழமை வந்தடைந்தது.

அணைக்கட்டுக்கு திங்கள்கிழமை இரவு 1,320 கன அடியாக இருந்த நீர்வரத்து, செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 4,333 கன அடியாக அதிகரித்தது. தொடர்ந்து, நீர்வரத்து அதிகரித்ததால் மாலை 4 மணி நிலவரப்படி 4,482 கன அடியாக பதிவானது. வாய்க்காலில் பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்ட நிலையில், ஆற்றில் வரும் தண்ணீர் முழுவதும் காவிரி ஆற்றில் சென்று கலந்து வருகிறது.

ADVERTISEMENT

பாதிப்பு...

காலிங்கராயன் அணைக்கட்டுக்கு கீழ்பகுதியில் அத்திக்கடவு - அவினாசி திட்டத்தின் முதன்மை நீரேற்று நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. பவானி ஆற்றின் வலது மற்றும் இடது கரையோரங்களில் இப்பணி தொடங்கப்பட்டது. இடது கரையில் கட்டுமானப் பணி நடக்கும் பகுதியைச் சுற்றிலும்  தண்ணீர் புகாத வகையில் மண் மூட்டைகள் அடுக்கப்பட்டு, மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மும்முரமாக தடையின்றி நடைபெற்று வருகிறது.

வலது கரையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீர் நிரம்பி ஓடுகிறது. மேலும், ஆற்றின் இடதுபுறத்திலிருந்து வலதுபுறத்துக்குச் செல்ல ஆற்றின் குறுக்கே சிமெண்ட் குழாய்கள் பதிக்கப்பட்டு தற்காலிக பாதை அமைக்கப்பட்டது. கட்டடத் தளவாடங்கள் கொண்டு செல்லவும், தொழிலாளர்கள் சென்று வரவும் அமைக்கப்பட்ட இப்பாதை மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

Tags : Bhavani
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT