தற்போதைய செய்திகள்

கடையம் வனச்சரக அலுவலக வளாகத்தில் கரடி பிடிபட்டது

31st May 2020 11:44 AM

ADVERTISEMENT

அம்பாசமுத்திரம்: கடையம் வனச்சரக அலுவகம் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு வளாகத்தில் வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் கரடி ஒன்று பிடிபட்டது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டத்தில் அம்பாசமுத்திரம், பாபநாசம், முண்டந்துறை, கடையம் உள்ளிட்ட வனச்சரகங்கள் அமைந்துள்ளன. இதில் கடையம் வனச்சரகத்திற்குள்பட்ட பகுதியில் கரடி, காட்டுப்பன்றி, மிளா, யானை உள்ளிட்ட விலங்குகள் தொடர்ந்து வனப்பகுதியிலிருந்து வெளியேறி விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்நிலையில், கடையம் வனச்சரகப் பகுதியான சிவசைலம், அழகப்பபுரம், பங்களாகுடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் கரடிகள் தொடர்ந்து நுழைந்து பயிர்களை நாசப்படுத்தியும் வீடுகளுக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்தியும் வந்தன. 

இது குறித்து வனச்சரக அலுவலகத்தில் கொடுத்தப் புகாரையடுத்து வனத்துறையினர் கரடியைப் பிடிக்க கூண்டு வைத்தனர். இதையடுத்து ஏப். 29 ஆம் தேதி பங்களாக்குடியிருப்புப் பகுதியில் வனத்துறையினர் வைத்தக் கூண்டில் கரடி சிக்கியது. இதையடுத்து சில நாள்களில் மீண்டும் சிவசைலம் ஊருக்குள் பகலில் புகுந்த கரடியை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர். தொடர்ந்தும் கரடி அட்டகாசம் இருந்ததையடுத்து கரடியைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர். இதில் சனிக்கிழமை (மே 30) இரவு சுமார் 12 வயது மதிக்கத்தக்க ஆண் கரடி ஒன்று சிக்கியது. 

ADVERTISEMENT

கூண்டில் சிக்கிய கரடியை அம்பாசமுத்திரம் கோட்ட துணைக் இயக்குநர் கொம்மு ஓம்காரம் உத்தரவின் பேரில் வனச்சரகர் நெல்லை நாயகம் தலைமையில் வனவர் முருகசாமி, வனக்காப்பாளர் சரவணன், வனக்காவலர்கள் முத்து, ரமேஷ்பாபு, வேட்டைத்தடுப்புக் காவலர்கள் மணிகண்டன், மனோகர், சக்திமுருகன், வேல்முருகன், பேச்சிமுத்து, மாரியப்பன், வேல்சாமி, மனோஜ், கனகராஜ், டேனியல், பிரதீப், வனத்துறை கால்நடை மருத்துவர் மனோகரன், கால்நடை ஆய்வாளர் அர்னால்ட், உயிரியலாளர் ஸ்ரீதர்  உள்ளிட்டோர் கரடியை பரிசோதித்த பின் முண்டந்துறை வனப்பகுதியில் பாதுகாப்பாகக் கொண்டு சென்று விட்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT