தற்போதைய செய்திகள்

தேனி அருகே மகாராஷ்டிர மாநிலத் தொழிலாளர்கள் போராட்டம்

15th May 2020 12:30 PM

ADVERTISEMENT

தேனி அருகே குன்னூரில் மகாராஷ்டிரம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை, தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி அருகே உள்ள தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் சார்பில் கரும்பு அறுவடை பணிக்காக கடந்த பிப்ரவரி மாதம் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து 84 தொழிலாளர்கள் தேனி மாவட்டத்திற்கு வரவழைப்பட்டிருந்தனர். தற்போது பொது முடக்கம் காரணமாக  கடந்த 50 நாட்களுக்கும் மேல் அவர்கள் வேலையின்றி குன்னூர் பகுதியில் உள்ள தனியார் தோட்டங்களில் முகாம் அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம், ஆலை நிர்வாகம் மற்றும் பொது நல அமைப்புகள் சார்பில் உணவு மற்றும் அத்தியவாசியப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கரும்பு அறுவடை பணிக்கு வந்திருந்த மகாராஷ்டிர மாநிலத் தொழிலாளர்கள், தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக் கோரி குன்னூரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆண்டிபட்டி காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன், காவல் ஆய்வாளர் சரவணதெய்வேந்திரன், வட்டாட்சியர் சந்திரசேகர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தனியார் கரும்பு ஆலைக்கு அழைத்துச் சென்று ஆலை வளாகத்தில் தங்க வைத்த அதிகாரிகள், அவர்களை விரைவில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT