தற்போதைய செய்திகள்

தமிழக தொழிலாளர்களை ஏற்றி வந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது: அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

14th May 2020 01:26 PM

ADVERTISEMENT

வாழப்பாடி: தமிழக தொழிலாளர்களை ஏற்றி வந்த கர்நாடக அரசு பேருந்து வாழப்பாடி அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், லேசான காயங்களுடன் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

கர்நாடக மாநிலம் குடகு பகுதியில்,  ரப்பர், காபி தோட்டங்களில்,  சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையில் உள்ள கல்வராயன் மலை கிராமங்களைச் சேர்ந்த  நூற்றுக்கணக்கானோர் குடும்பத்தோடு தங்கி பணிபுரிந்து வந்தனர்.

கரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு போடப்பட்டதால், வேலையின்றி தவித்த தொழிலாளர்கள், சொந்த கிராமத்துக்கு திரும்ப விருப்பம் தெரிவித்தனர்.

இதனையடுத்து, தமிழக தொழிலாளர்களை கர்நாடக மாநில அரசு,  சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து வருகிறது. இன்று வியாழக்கிழமை கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் இருந்து மூன்று பேருந்துகளில்  பெண்கள், குழந்தைகள் உட்பட 90 பேரை, ஏற்றிக்கொண்டு,  சேலம் மாவட்டம் கல்வராயன் மலை கிராமங்களுக்கு, கர்நாடக மாநில  3 அரசு பேருந்துகள்  வாழப்பாடி வழியாக வந்தன.  நண்பகல் 12 மணி அளவில், சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாழப்பாடி புறவழி பிரிவு சாலை அருகே,  ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தபோது,  கட்டுப்பாடு இழந்து நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. 

ADVERTISEMENT

இந்த விபத்தில், பேருந்தில்  பயணித்த கல்வராயன்மலை கிராமங்களை சேர்ந்த 10 ஆண்கள், 7 குழந்தைகள், 13 பெண்கள் உட்பட 30 பேர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் சூரியமூர்த்தி, காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம் ஆகியோர் கொண்ட காவலர்கள், விபத்து நடந்த இடத்திற்கு சென்று, பேருந்தில் சிக்கி இருந்த தொழிலாளர்களை மீட்டு, மற்றொரு பேருந்தில் ஏற்றி கல்வராயன் மலை கிராமங்களுக்கு அனுப்பி வைத்தனர். மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி பணியாளர்களும் காவல் துறையினரும் இணைந்து, பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்தை மீட்டனர்.

இந்த விபத்து குறித்து வாழப்பாடி காவல்துறையினர் வழக்குப் பதிந்து, பேருந்தை ஓட்டி வந்த கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர் பாலன் (37) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT