திருப்பூரில் இருந்து ஒடிசா, உத்தரப்பிரதேசம் மாநிலங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் 2,928 தொழிலாளர்கள் புதன்கிழமை அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.
திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பிகார், மேற்கு வங்கம், ஜார்கண்ட், மத்தியபிரதேசம், உத்தரப்பிரதேசம், ஒடிசா, குஜராத், அஸ்ஸாம் உள்ளிட்ட 22 மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில்,கரோனா பொதுமுடக்கம் காரணமாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கரோனா பொதுமுடக்கத்தால் வேலை இழந்த வடமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கக்கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் கணக்கெடுப்பு நடத்தியது. இதில்,10,400 தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல விருப்பம் தெரிவித்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து, கடந்த ஞாயிறு, செவ்வாய்க்கிழமைகளில் பிகார் மாநிலத்துக்கு 2 சிறப்பு ரில்கள் இயக்கப்பட்டன. இந்த 2 ரயில்களிலும் 2,558 தொழிலாளர்கள் ஏற்கெனவே அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த நிலையில், திருப்பூரில் இருந்து புதன்கிழமை ஒடிசா, உத்தரப்பிரதேசத்துக்கு 2 ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதில், 2,928 தொழிலாளர்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளனர். முன்னதாக பல்வேறு பகுதிகளில் இருந்து காவல் துறையினர் பாதுகாப்புடன் ரயில் நிலையத்துக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அழைத்து வரப்படும் தொழிலாளர்களுக்கு வெப்ப அளவு பரிசோதனை செய்யப்பட்டு, 2 வேளை உணவு மற்றும் குடிநீர் பாட்டிலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.