மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடி, குத்தாலம் பகுதிகளில் தொற்று உறுதி செய்யப்பட்ட 2 பேர் மயிலாடுதுறை பெரியார் அரசினர் மருத்துவமனையில் புதன்கிழமை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடி வட்டம் புஞ்சை கிராமத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர், தனக்கு கரோனா அறிகுறிகள் ஏதும் இல்லாத நிலையில், பாண்டிச்சேரி மாநிலத்தில் புதிதாக வேலைக்கு சேர்வதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா பரிசோதனை செய்துள்ளார். இவர் கடந்த மாதம் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு சென்று வந்துள்ளார்.
இதேபோல், குத்தாலம் வட்டம் திருவாவடுதுறை கிராமத்தைச் சேர்ந்த 59 வயதுடைய நபர் கடந்த மாதம் புட்டபர்த்தி சென்று திரும்பியுள்ளார். இவர் ஏற்கெனவே மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனை கரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் இருந்தார்.
இவர்கள் இருவருக்கும் புதன்கிழமை கரோனா பரிசோதனை முடிவுகள் வந்த நிலையில், இருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர்கள் சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் ஏற்கெனவே ஒருவர் கரோனா சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இவரையும் சேர்த்து மொத்தம் 3 பேர் தற்போது கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.