தற்போதைய செய்திகள்

மதுபான விற்பனைக்கு தனி செயலி, இணையதளப் பக்கம்:  வழக்குத் தொடர்ந்தவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்

13th May 2020 01:46 PM

ADVERTISEMENT


சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களை விற்பனை செய்ய செயலி, இணையதளப் பக்கத்தை தொடங்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், வழக்குத் தொடர்ந்தவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் பொதுமுடக்கம் காரணமாக டாஸ்மாக் மதுபான விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மதுபானங்கள் பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. கள்ளச் சாராயமும் பல இடங்களில் விற்பனைச் செய்யப்படுகிறது. டாஸ்மாக் மதுபான கடைகளில் ரசீது வழங்கப்படுவதில்லை. எனவே டாஸ்மாக் மதுபானங்களை விற்பனைச் செய்ய செல்லிடப்பேசிக்கான செயலி மற்றும் பிரத்யேக இணையதளப் பக்கத்தை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்யநாராயணா ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது அரசு தரப்பில், டாஸ்மாக் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து  உத்தரவிட கோரி மனுதாரர் வழக்குத் தொடர முடியாது என வாதிடப்பட்டது. இதனையடுத்து மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மனுவை வாபஸ் பெற அனுமதியளித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதிகள், மனுதாரருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர். இந்த தொகையை தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு செலுத்த உத்தரவிட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT