கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையின் 10-ஆவது தளத்தில் புதன்கிழமை 9.40 மணியளவில் காணொலிக் காட்சி வழியாக அனைத்து மாவட்ட ஆட்சியா்களுடன் அவா் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
கரோனா தொற்றை தடுப்பது மக்களின் கையில்தான் உள்ளது: கூட்டத்தின் தொடக்கத்தில் முதல்வர் பழனிசாமி பேசுகையில், கண்ணுக்கு தெரியாத நோய்த்தொற்று எளிதாக பரவும் என்பதை தொடர்ந்து கூறி வலியுறுத்தி வருகிறோம். தொற்று பாதிப்பு முதலில் உயர்ந்துபின்னர் குறையும் என கண்டறியப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் இந்தியாவிலும் தற்போது உயர்ந்துள்ள தொற்று பாதிப்பு பின்னர் குறைய வாய்ப்புள்ளது.
கரோனா நோய்த்தொற்றை தடுப்பது மக்களின் கையில்தான் உள்ளது. தனிமனித இடைவெளி, முகக் கவசம் அணிவது போன்ற விதிமுறைகளை கடைப்பிடித்தலின் மூலம் தொற்று பரவலை தடுக்க முடியும். பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும்.
ஏழை, எளிய மக்களுக்கு அத்தியாவசிய தேவைக்கான பொருட்கள் கிடைக்க அரசு வழிவகைகளை செய்துள்ளது.
குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு ரேஷன் கடைகள் மூலம், விலையில்லா அரிசி, எண்ணெய், சர்க்கரை மற்றும் பருப்பு ஆகியவை கடந்த ஏப்ரலில் வழங்கப்பட்டது. இது மே மாதத்திலும் வழங்கப்பட்டு உள்ளது. மே மாதத்தை போல ஜூன் மாதத்திலும் இந்த பொருட்களை மக்கள் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். அதனால் தமிழகத்தில் உணவு பஞ்சம் என்பது ஏற்படவில்லை என கூறியுள்ளார்.
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு முதலில் ரூ.1,000 மற்றும் அரிசி, எண்ணெய், சர்க்கரை மற்றும் பருப்பு ஆகியவை வழங்கினோம். இதன்பின்னர் மீண்டும் ரூ.1,000 அவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
அம்மா உணவகங்கள் வழியேயும் மக்களுக்கு நாள்தோறும் உணவு வழங்கி வருகிறோம். இதனால் லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் பயன் பெறுகின்றனர் என முதல்வர் பழனிசாமி கூறினார்.
மத்திய அரசால் மூன்றாவது முறையாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் வரும் 17-ஆம் தேதியுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகளை தமிழக அரசு எடுக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.