தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் நெல் உற்பத்தி 20 சதவீதம் அதிகரிப்பு: அமைச்சர் ஆர். காமராஜ் தகவல்

10th May 2020 01:49 PM

ADVERTISEMENT


திருவாரூர்: தமிழகத்தில் நெல் உற்பத்தி 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவித்தார்.

திருவாரூர் நகர,  ஒன்றியப் பகுதிகளில் கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பல்துறை கலைஞர்களுக்கு மாவட்ட அதிமுக சார்பில் மளிகைப் பொருட்கள், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப்புப் பெட்டிகளை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார். நிகழ்ச்சியில் சிவாச்சாரியார்கள், கிராமக் கோவில் பூசாரிகள், கைவினைக் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள், சமையல் கலைஞர்கள், சலவை தொழிலாளிகள், முடி திருத்துவோர், ஆட்டோ ஓட்டுநர்கள், மயானத் தொழிலாளர்கள், இருசக்கர வாகன பழுது பார்ப்போர், திருநங்கைகள் என 2000 கலைஞர்களுக்கு தொகுப்பு பெட்டிகளை வழங்கினார். 

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று சமூக பரவல் என்கிற நிலைக்கு வரவில்லை. இந்த தொற்று கட்டுக்குள் உள்ளது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் 31 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் தற்போது 3 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். மற்றவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எனவே பொதுமக்கள் தொற்று பாதிப்பு குறித்து அச்சப்பட வேண்டாம். அதே நேரத்தில் மக்கள் எச்சரிக்கையுடன் இருந்து கொள்ள வேண்டும். 

திருவாரூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் 1.25 லட்சம் குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பெட்டி வழங்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

தமிழகத்தில் விவசாயப்பணிகளை மேற்கொள்ளும் வகையில் ஆறு குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரப்பட உள்ளன. விவசாய சங்கங்களை இணைத்து குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டைப்போல் வரும் ஆண்டும் குறுவை, சம்பா நெல் சாகுபடி சிறப்பாக இருக்கும். மேட்டூர் அணை திறப்பது குறித்து முதல்வர் விரைவில் முடிவு எடுத்து அறிவிப்பார்.

விவசாயப் பணிகளுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக நெல் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதுவரை காவிரி டெல்டா உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக 22 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 6 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட இருக்கிறது. 

கடந்த ஆண்டை விட 20 சதவீதம் நெல் கொள்முதல் அதிகரித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 20 சதவீதம் உற்பத்தி அதிகரித்துள்ளது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. 

கரோனா தொற்று தடுப்பு ஊரடங்கினை முன்னிட்டு விலையில்லாமல் வழங்கப்படும் கூடுதல் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் 60 சதவீதம் விநியோகம் செய்யப்பட்டுள்ளன என்று அமைச்சர் இரா.காமராஜ் கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT