வேலூர்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயது பெண்மணி சனிக்கிழமை இரவு திடீரென உயிரிழந்தார். எனினும், கரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்த நிலையில் வேறு காரணங்களாலேயே அவர் உயிரிழந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வேலூர் கொணவட்டம் பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் நேதாஜி மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வருகிறார். தில்லியில் நடைபெற்ற தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநாட்டுக்குச் சென்று வந்த இவருக்கு கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 52 வயதுடைய அவரது மனைவி, 29 வயது மகள், 4 வயது பேத்திக்கும் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படட்டதை அடுத்து அவர்களும் சிஎம்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 4 பேரும் குணமடைந்தனர். எனினும், 52 வயது பெண்மணிக்கு உடலில் வேறு பிரச்னைகள் இருப்பதால் அதே மருத்துமனையில் அவர் கரோனா வார்டில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு அவருக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது. மருத்துவர்கள் தொடர்ந்து முயற்சித்தும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
கரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்த பிறகு ஏற்பட்டுள்ள இறப்பால் அவரை கரோனா நோயாளிக்கான இறுதிச்சடங்கு வழிமுறைகள் பின்பற்றப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்றுக்கு வேலூர் மாவட்டத்தில் இதுவரை 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். மற்ற அனைவரும் படிப்படியாக குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டிருந்த பெண்மணி உயிரிழந்ததால் வேலூர் கொணவட்டம் பகுதியில் மக்களிடையே சற்று பதற்றம் நிலவுகிறது.