திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா தொற்றறால் பாதிக்கப்பட்டோருக்கு படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக திருவள்ளூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி முதல்வர் அர்ஷி ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
இந்த மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மாவட்டத்தில் சனிக்கிழமை வரையில் 290 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 61 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 229 ஆக உள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சை அளிக்க பொது சுகாதாரத்துறைற ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா பாதித்தவர்களை இங்குள்ள அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் நவீன மகப்பேறு மற்றும் குழந்தைகள் சிகிச்சை மையத்தில் 100 படுக்கைகளுடன் கரோனா சிறப்பு வார்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், பொன்னேரியில்-30, திருத்தணி-60, திருவள்ளூர்-திருத்தணி சாலையில் உள்ள செயல்படாத தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில்-100, பட்டரைப்பெரும்புதூர் அருகே அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில்-80 படுக்கைகளுடன் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவற்றில், தற்போது திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு மையத்தில் கரோனா பாதித்த 47 ஆண்கள், 13 பெண்கள், ஒரு குழந்தை என 61 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு சிகிச்சை பெறுவோருக்கு நேரம் தவறாமல் சத்தான உணவு வகைகள், சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.