திருச்சி: அன்னையர் தினத்தையொட்டி மலேசியாவில் இருந்து திருச்சி வந்த சிறப்பு விமானத்தை பெண் விமானியை இயக்க வைத்து ஏர் இந்தியா விமானம் சிறப்பு செய்தது.
கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 177 பேர் இந்தியர்கள் இந்தியாவிற்கு வரமுடியாமல் சிக்கித் தவித்தனர். அவர்களை இந்தியா அழைத்து வருவதற்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கைகள் வைக்கப்பட்டதை தொடர்ந்து இந்திய அரசின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொண்ட முயற்சியின்படி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு விமானம் இயக்கப்பட்டது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து மதியம் 1.10 மணிக்கு விமானம் பயணிகளை ஏற்றி வருவதற்காக கோலாலம்பூருக்கு அனுப்பிவைக்கப்பட்டது, இந்த விமானம் மலேசியாவில் சிக்கி தவித்த 178 இந்திய பயணிகளுடன் இரவு சுமார் 10.20 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. இவர்களுக்கான பரிசோதனை ஏற்பாடுகளை விமான நிலைய அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர், அதன்படி விமானத்தில் பயணம் செய்த 178 பயணிகளும் ஆர்டிபிசிஆர் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதனைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சேதுராப்பட்டி தொழில்நுட்பக் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், கள்ளிக்குடி வணிக வளாகம் மற்றும் தனியார் விடுதியில் 14 நாட்கள் தனிமைப்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
அன்னையர் தினத்தையொட்டி, பெண் விமானி கேப்டன் கவிதா ராஜ்குமார் தலைமையில் இந்த பேரிடர் கால சிறப்பு விமானம் இயக்க வைத்து சிறப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.