தற்போதைய செய்திகள்

ஓமலூர் அருகே மென் பொறியாளர் கொலை: 12 பேர் கைது

9th May 2020 04:09 PM

ADVERTISEMENT


சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மென் பொறியாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 12 பேரை தனிப்படை காவலர்கள் கைது செய்துள்ளனர். 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகில் உள்ளது பொட்டியபுரம். இந்த ஊரில் வெள்ளிக்கிழமை இரண்டு தரப்பினர் மது குடித்துவிட்டு வாய் தகராறு செய்து கொண்டனர். இந்த வாய்த்தகராறு முற்றி இரண்டு தரப்பினரும் மாறி மாறி மோதிக் கொண்டனர். இவர்களை அக்கம் பக்கம் இருந்தவர்கள் சமாதானப்படுத்தினர். ஆனால் இரண்டு தரப்பினரும் கேட்காமல் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.

இந்த தகராறை அறிந்த பொட்டிபுரம் புதுக்கடை காலனியைச் சேர்ந்த விஷ்ணுப்பிரியன் வீட்டிலிருந்து வெளியில் வந்து விசாரித்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் விஷ்ணுபிரியனை உருட்டுக்கட்டை மற்றும் கம்பிகளால் சரமாரியாக தாக்கியது. இதில், விஷ்ணுப்பிரியன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

பின்னர்,  உறவினர்கள் விஷ்ணுப்பிரியனை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே விஷ்ணு பிரியன் துடிதுடித்து இறந்தார்.

ADVERTISEMENT

விஷ்ணுப்பிரியன் சடலம் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விஷ்ணுப்பிரியன் கொலை செய்யப்பட்டதால் பொட்டிபுரம் மற்றும் இதை ஒட்டியுள்ள புதுக்கடை காலனி பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த மோதலை அறிந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா உடனே பொட்டியபுரம் வந்து விசாரித்தார். பின்னர் கொலை செய்யப்பட்ட விஷ்ணு பிரியன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இந்த கொலையில் குற்றவாளிகளை பிடிக்க ஓமலூர் காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் கொண்ட தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். 

தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி, பொட்டியபுரத்தை சேர்ந்த செந்தில் மற்றும் சண்முகம், ஹரி, சிவகுமார், தமிழ்மணி, மற்றொரு சண்முகம், அருள், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 12 பேரை சனிக்கிழமை காலை கைது செய்தனர். இவர்கள் அனைவரும் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

கொலை செய்யப்பட்ட விஷ்ணுப்பிரியன் சடலத்தை வாங்கி செல்ல திரளான உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு சனிக்கிழை காலை வந்தனர். இதனால் மருத்துவமனையில் அதிகமான காவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

கொலை செய்யப்பட்ட விஷ்ணுப்பிரியன் சென்னையில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். விஷ்ணுப்பிரியனுக்கு கடந்த மார்ச் மாதம் தீபா என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது. விஷ்ணு பிரியான் கொலை செய்யப்பட்டதை அறிந்த அவரது மனைவி தீபாவும் மற்றும் உறவினர்களும் திரளாக மருத்துவமனைக்கு வந்து கதறி அழுதனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT