தற்போதைய செய்திகள்

ஈரோட்டில் 2-வது நாளாக ரூ. 5 கோடிக்கு மது விற்பனை

9th May 2020 10:21 AM

ADVERTISEMENT

ஈரோடு: தமிழகம் முழுவதும் மதுபான கடைகள் புதன்கிழமை கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டன.  இதற்கு திமுக உள்பட கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 45 நாட்களுக்குப் பிறகு மதுக் கடைகள் திறக்கப்பட்டதால் மதுக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.  சில இடங்களில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பெரும்பாலான கடைகளில் அரசு அறிவித்த நிபந்தனைகள் முறையாக கடைபிடிக்கப் படவில்லை என புகார் எழுந்தது. 

ஈரோடு மாவட்டத்தில் 143 மதுக்கடைகள் திறக்கப்பட்டன. காவலர்கள் பாதுகாப்புடன் தடுப்பு வேலிகள் அமைத்து மது வாங்க வந்தவர்கள் மதுவை வாங்கி சென்றனர். ஈரோடு மாவட்டத்தில் முதல் நாளில் ரூ.8 கோடியே 67 லட்சத்து 34 ஆயிரத்துக்கு மது விற்பனையாகின.  

இந்நிலையில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை மது விற்பனை நடந்தது. ஈரோடு மாவட்டம் முழுவதும்  ரூ.5 கோடியே 47 லட்சத்து 42 ஆயிரத்துக்கு மதுபானங்கள் விற்பனை ஆயின.  

இந்நிலையில் மதுக்கடைகளில் முறையாக நிபந்தனைகள் பின்பற்றவில்லை  என்று கூறி நீதிமன்றம் தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆன்லைன் மட்டும் விற்பனை செய்யலாம் என அனுமதி அளித்துள்ளது.  

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் சனிக்கிழமை அனைத்து மதுக்கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. நீதிமன்ற உத்தரவு தெரியாமல் சில குடிமகன்கள் டாஸ்மாக் கடை முன்பு காத்துக்கிடந்தனர்.  பின்னர் டாஸ்மாக் கடை அடைக்கப்பட்டுள்ளது என்பது தகவல் அறிந்ததும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 
 
இதுகுறித்து ஈரோடு மாவட்ட டாஸ்மாக் பொது மேலாளர் இளங்கோ கூறியதாவது: நீதிமன்ற உத்தரவுப்படி டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் விற்பனை செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது ஆனால் இது குறித்து முறையான அறிவிப்பு இன்னும் வரவில்லை. இதற்கான முறையான அறிவிப்பு வந்தால் நிபந்தனைகளுடன் ஆன்லைனில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT