தற்போதைய செய்திகள்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு

8th May 2020 12:53 PM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட 144  மற்றும் முழு ஊரடங்கு  அமல்படுத்தப்பட்ட நிலையில் மாநிலத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன.

இந்நிலையில் புதன்கிழமை (மே 7) கரோனா தொற்று இல்லாத பகுதிகளில் மட்டும் டாஸ்மார்க் கடை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது.

அதன்படி உத்தமபாளையம் அருகே பல்லவராயன் பட்டியில் புதன்கிழமை டாஸ்மார்க் கடை திறக்கப்பட்டது. பல்லவராயன் பட்டி பண்ணைபுரம், கோம்பை, உத்தமபாளையம், மார்க்கையன்கோட்டை சின்னமனூர் ,குச்சனூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மது பிரியர்கள் குவிந்தனர். வியாழக்கிழமை டாஸ்மார்க் கடை திறக்கும் முன்பே மதுபாட்டில்கள் வாங்க மது பிரியர்கள் குவிந்திருந்தனர்.

ADVERTISEMENT

இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி கூட்டம் கூட்டமாக ஆயிரக்கணக்கானோர் குவிந்து வருவதால் கரோனா தோற்று பரவ வாய்ப்பு இருப்பதாக கூறி டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என   டாஸ்மார்க் கடை முன்பாக அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தேவாரம் காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், சமூக இடைவெளி பின்பற்றி மது பாட்டில்கள் வினியோகம் செய்யப்படும் இதன் மூலம் நோய்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சுமார் ஒரு மணி நேரம் கால தாமதத்துடன் டாஸ்மார்க் கடை இரண்டாவது நாளாக செயல்படத் தொடங்கியது. மது பிரியர்கள் வருகை வழக்கம்போல் அதிகமாக இருப்பதால் காவலர்களின் பலத்த பாதுகாப்புக்கு இடையே மதுபாட்டில்கள் வினியோகம் செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT