தற்போதைய செய்திகள்

திருவள்ளூர் அருகே ஆம்புலன்ஸ் வாகனம் தாமதத்தால் பச்சிளங் குழந்தை உயிரிழப்பு

27th Jun 2020 01:21 PM

ADVERTISEMENT


திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பிறந்த பச்சிளங்குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் அவசர வாகனத்துக்கு தகவல் அளித்தும் 3 மணிநேரம் தாமதமாக வந்ததால் குழந்தை உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி. இவரது மனைவி முனியம்மாள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அதைத் தொடர்ந்து அருகில் உள்ள புலியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சனிக்கிழமை அதிகாலையில் ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து பிறந்த பச்சிளங் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், உடனே திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் அவரச வாகனம் வராத நிலையில், திருத்தணியில் இருந்து ஆம்புலன்ஸ் 3 மணி நேரம் காலதாமதமாக வந்துள்ளது. அதையடுத்து அந்த பெண்ணையும், பச்சிளங் குழந்தையையும் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். ஆனால், சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பலனின்றி பச்சிளங் குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தது. 

இதற்கிடையே ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்து, இவர்களை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தால் பச்சிளங் குழந்தையை காப்பாற்றி இருக்க முடியும். ஆனால், 3 மணி நேரம் காலதாமதமாக அவசர வாகனம் வந்த காரணத்தாலே பச்சிளங் குழந்தை உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

கரோனா நோயாளிகள் அழைத்துவர அவசர வாகனம் உள்ள நிலையில், இதுபோன்ற அவசர தேவைக்கு பயன்படுத்தினால் பச்சிளங் குழந்தையின் உயிரிழப்பை தவிர்த்திருக்க முடியும். எனவே பிறந்த சில மணிநேரம் ஆன மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயரிழந்த ஆண் பச்சிளங்குழந்தை உயிரிழந்த சம்பவம் பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், திருவள்ளூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் அவசர வாகனம் பழுதடைந்து நிறுத்தப்பட்டுள்ள காரணத்தால் தான், திருத்தணியில் இருந்து அவசர வாகனம் வரவழைக்கப்பட்டதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT