ஈரோடு: ஈரோட்டில் கரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி ஒருவர் சனிக்கிழை உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தடுப்பு நடவடிக்கையாக வளையக்கார வீதி, வி.வி.சி.ஆர்.நகர், சம்பத் நகர், கண்ணகி வீதி, திருநகர் காலனி, பாலசுப்பிரமணி வீதி உள்ளிட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரோடு கருங்கல்பாளையம், திருநகர் காலனி, பாலசுப்பிரமணி வீதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 நபர்களுக்கு கரோனா அறிகுறிகள் இருந்ததையடுத்து பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 23ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதில் பெண் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அடுத்த இரண்டு நாள்களில் இப்பெண்ணின் கணவருக்கும்(58) கரோனா உறுதி செய்யப்பட்டது. இவர் ஈரோட்டில் இருந்து திருப்பூர் பனியன் நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சையில் இருந்தவருக்கு சனிக்கிழமை காலை மூச்சுத் திணறல் அதிகரித்ததையடுத்து சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து மாவட்டத்தில் கரோனா பாதிப்பு காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.