தற்போதைய செய்திகள்

கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் 2 -வது நாளாக வெளிமாவட்ட வாகனங்கள் திருப்பி அனுப்பி வைப்பு  

26th Jun 2020 03:31 PM

ADVERTISEMENT


ஈரோடு: கரோனா பரவலை தடுக்கும் வகையில் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு வரும் 30 -ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.  இ-பாஸ் பெற்று வரும்  வாகனங்கள் மட்டுமே  வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதைடுத்து மாவட்ட எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டு காவலர்கள் அங்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.  

ஈரோடு மாவட்டத்தில் கருங்கல்பாளையம் சோதனை சாவடி முக்கிய எல்லைப் பகுதியாக திகழ்ந்து வருகிறது. இங்கு கருங்கல்பாளையம் காவலர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வெளிமாவட்ட வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். அதேசமயம் இ-பாஸ் பெற்று வரும் வாகனங்கள் கடுமையான சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகிறது.  கருங்கல்பாளையம் சோதனை சாவடியை பொருத்தவரை அந்த வழியாக சேலம் நாமக்கல் குமாரபாளையம் பள்ளிபாளையம் சென்னை போன்ற ஊர்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும்.  தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதால் பிற மாவட்டங்களில் இந்த வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.  இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் வெளிமாவட்ட வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன. அதேசமயம் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் கடும் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அரசு ஊழியர்கள் வங்கி ஊழியர்கள் டாக்டர்கள் போன்றோர் அனுமதிக்கப்படுகின்றனர்.  வெளிமாவட்ட தொழிலாளர்கள்,  தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் அனுமதிக்கப்படவில்லை.

பள்ளிபாளையம் குமாரபாளையம் நாமக்கல் போன்ற மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈரோட்டில் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  அவர்கள் பெரும்பாலும் மோட்டார் சைக்கிளில் தான் ஈரோட்டுக்கு வருவார்கள் இவர்கள் வியாழக்கிழமை முதல் ஈரோட்டிற்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் என்ன செய்வது என்று தவித்து வருகின்றனர். மேலும் சில தொழிலாளர்கள் நடந்தே செல்கின்றனர்.  ஒவ்வொரு வாகனமும் சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவதால் வாகனங்கள் 2 கிலோ மீட்டர் முதல் 3 கிலோ மீட்டர் தூரம் வரை அணிவகுத்து நிற்கின்றன.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT