தற்போதைய செய்திகள்

ஈரோட்டில் 23 சதவீதம் தெரிந்த சூரிய கிரகணம்

21st Jun 2020 04:15 PM

ADVERTISEMENT


ஈரோடு: ஈரோட்டில் சூரிய கிரகணம் 23 சதவீதம் தெரிந்தது. தற்போது மாவட்டத்தில் கரோனா பீதியால் மக்கள் கிரகணத்தை காண ஆர்வம் காட்டவில்லை.

சூரியன், சந்திரன், பூமி ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரியக் கதிர்கள் பூமியில் விழாதவாறு சந்திரன் நிழல் மறைக்கும். இந்த நிகழ்வே சூரிய கிரகணம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் சூரிய கிரகணம் ஞாயிற்றுக்கிழமை காலை 9.15 மணி முதல் மதியம் 1.40  வரை தெரிந்தது. இந்த கிரகணம் ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா போன்ற மாநிலங்களில் முழுமையாக காணமுடிந்தது. தென் மாநிலங்களில் 23 சதவீதம் முதல் 33 சதவீதம் வரை மட்டுமே பார்க்க முடிந்தது. 

ஈரோட்டில்  இந்த சூரிய கிரகணம் காலை 10.17 மணி முதல் மதியம் 12 மணி வரை 23 சதவீதம் வரை மட்டுமே தெரிந்தது. இதில் சூரியனை கீழ் புறத்தில் சந்திரன் மறைத்து அதன் நிழல் மட்டும் காணமுடிந்தது. ஈரோட்டில் பல பகுதிகளில் முக கண்ணாடிகளில் சூரிய ஒளி படும்படி வைத்து அதன் மறு பிம்பம் மூலம் கிரகணத்தை பார்த்தனர். சிலர் சூரியகண்ணாடி மூலமும் பார்வையிட்டனர். 

ADVERTISEMENT

கரோனா பீதியால் சூரிய கிரகணத்தை பொதுவெளியில் பார்க்க விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் மணி கூறியதாவது: ஈரோட்டில் சூரிய கிரகணம் 10:17 மணிக்கு சரியாக தெரிய தொடங்கியது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட சூரிய கிரகணத்தை தென்னிந்தியாவில் முழுமையாக பார்க்க முடியவில்லை. 23 சதவீதம் முதல் 33 சதவீதம் வரை மட்டுமே காண முடிந்தது.

அதே சமயத்தில் ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட 4 மாநிலங்களில் முழுமையாக தெரிந்தது. சூரிய கிரகணத்தால் வைரஸ் அழிந்துவிடும் என்ற தகவலும் பொய்யானது தான்.  

ஈரோட்டில் 11:40 அளவில் 23 சதவீதம் அளவு தெரிந்தது. 12 மணி வரை சூரிய கிரகணம் ஈரோட்டில் காணமுடிந்தது. அதே நேரத்தில் கிரகணத்தின் போது வெளியே வர வேண்டாம் என்பதும் சாப்பிடக் கூடாது என்பதும் அவரவர்களின் மூடநம்பிக்கையை பொருத்தது என்று கூறினார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT