தற்போதைய செய்திகள்

அகரத்தில் பானை கண்டுபிடிப்பு, கொந்தகையில் முதுமக்கள் தாழிகள் அளவிடும் பணி தொடக்கம்

17th Jun 2020 12:27 PM

ADVERTISEMENT


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அகரத்தில் நடந்து வரும் அகழாய்வில் பானைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  கொந்தகை அகழாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழிகளை அளவிடும் பணியும் தொடங்கியுள்ளது.

கீழடியில் கடந்த பிப்ரவரி 19 ந் தேதி முதல் 6 ஆம் கட்ட அகழாய்வு தொடங்கி நடந்துவருகிறது. மேலும் அருகேயுள்ள அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய இடங்களிலும் அகழாய்வு விரிவுபடுத்தப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

இந்த இடங்களில் நடந்து வரும் அகழாய்வில்  கீழடி, கொந்தகை, மணலூர், அகரத்தில் அடுத்தடுத்து மண்ணால் வடிவமைக்கப்பட்ட சுடு உலை, பானைகள், முத்துமக்கள் தாழிகள், முதுமக்கள் தாழிகளுக்குள் மனித எலும்புகள், விலங்கின வகை எலும்பு உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த நிலையில் அகரத்தில் அகழாய்வுக் குழியில் மண்பானை புதைந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது 2600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய பானை என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

மேலும் கொந்தகையில் அதிக அளவில் முதுமக்கள் தாழிகள் கிடைத்து வருகின்றன. இதுவரை 10 க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வாளர்கள் தற்போது இந்த தாழிகளை அளவீடு செய்யும் பணியை தொடங்கியுள்ளனர். இதுவரை 3 முதுமக்கள் தாழிகள் மட்டுமே அளவீடு செய்யப்பட்டுள்ளது.

இனிவரும் நாட்களில் அனைத்து தாழிகளும் அளவீடு செய்து தொல்லியல் துறை நிர்வாகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT