தற்போதைய செய்திகள்

வானொலிப் பெட்டி வெடித்ததில் விவசாயி பலி; மூவர் காயம்

17th Jun 2020 06:54 PM

ADVERTISEMENT


சேலம்: சேலம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள தும்பல்பட்டி பகுதியில் சாலையில் கிடந்த வானொலி பெட்டி வெடித்து சிதறியதில் விவசாயி மணி (50) என்பவர் இறந்தார்.

வெடித்துச் சிதறக் காரணம் என்ன, வெடிபொருளா என்பது பற்றிக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

பனமரத்துப்பட்டி அருகே உள்ள தும்பல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணி. விவசாயியான இவர் வீட்டருகே செவ்வாய்க்கிழமை இரவு ஒரு வானொலி பெட்டி கிடந்துள்ளது. இதைப் பார்த்த மணி, அதை எடுத்து வந்து வீட்டில் வைத்திருந்தார்.

இந்த நிலையில் புதன்கிழமை மதியம் அந்த வானொலி பெட்டியை எடுத்து, மின் இணைப்பு கொடுத்து இயக்க செய்திருக்கிறார். அப்போது திடீரென அந்த வானொலி பெட்டி வெடித்து சிதறியதில் பலத்த காயமடைந்த மணி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

ADVERTISEMENT

இதில் 12 வயது சிறுமி செளரூபியா மற்றும் வசந்தகுமார் (37), நடேசன் (67) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து மூன்று பேரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

இவர்களில் பலத்த காயமடைந்த 12 வயது சிறுமி செளரூபியா உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக தெரிகிறது.


பனமரத்துப்பட்டி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.  வெடித்து சிதறிய பொருள் என்ன என்பது குறித்து தடயவியல் நிபுணர்கள், வெடிகுண்டு நிபுணர்கள் பரிசோதித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT