தற்போதைய செய்திகள்

நெல்லையில் கடைக்குள் பெட்ரோல் கேன்களுடன் வியாபாரிகள் திடீர் போராட்டம்

7th Jun 2020 11:27 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி: திருநெல்வேலியில் தினசரி சந்தை கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து ஒரு கடைக்குள் 5 வியாபாரிகள் பெட்ரோல் கேனுடன் அமர்ந்து தீக்குளிக்க போவதாகக் கூறி ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி நகரத்தில் அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோவில் அருகே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தினசரி காய்கனி சந்தை உள்ளது. மாநகராட்சிக்குச் சொந்தமான இந்த சந்தையில் உள்ள கடைகளை இடித்துவிட்டு பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் புதிதாக சந்தை வணிக வளாக கடைகளைக் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து வியாபாரிகளும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். 
கரோனா பொதுமுடக்கத்தால் இங்கிருந்த காய்கனி கடைகள் அரசு பொருள்காட்சித் திடல் மைதானத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், மளிகை கடைகள் உள்ளிட்டவை மட்டும் சந்தை வளாகத்தில் செயல்பட்டு வந்தன.

ADVERTISEMENT

இந்நிலையில், சந்தை வணிக வளாக கட்டுமான பணி தொடங்க உள்ளதால் கடைகளை காலி செய்ய மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 44 ஆம் நம்பர் கடைக்குள் அழகேசன், சுரேஷ், ரசூல், இளஞ்செழியன், அந்தோணி ஆகியோர் பெட்ரோல் கேனுடன் கடைக்குள் அமர்ந்து கிரீல் கேட்டை பூட்டிக்கொண்டனர். 

மேலும், கடைகளை காலி செய்ய சொல்வதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால் தற்கொலை செய்யப்போவதாக தெரிவித்தனர். 

தகவலறிந்து மாநகர காவல் உதவி ஆணையர் சதீஷ்குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வந்து வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தற்காலிக கடைகளை ஒரே இடத்தில் நடத்த அனுமதியளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வியாபாரிகள் வலியுறுத்தினர். 

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத்தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT