தற்போதைய செய்திகள்

புழுதிக்குட்டை ஆணைமடுவு அணை மீன் விதைப்பண்ணையில் 4 லட்சம் விதை மீன்குஞ்சுகள் விற்பனை செய்ய இலக்கு

4th Jun 2020 11:28 AM

ADVERTISEMENT

 

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை ஆணைமடுவு அணையிலுள்ள மீன் விதைப் பண்ணையில், நிகழாண்டில் 4 லட்சம் விதை மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்து, மீன் வளர்ப்போருக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ருசி மிகுந்த ரகமான 1.40 லட்சம் மிருகால் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை கிராமத்தில் வசிஷ்ட நதியின் குறுக்கே, 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 263.86 ஏக்கர் பரப்பளவில் ஆணைமடுவு அணை அமைந்துள்ளது.  
இந்த அணையில் மீன் வளர்ச்சித்துறை வாயிலாக மீன்கள் உற்பத்தி செய்து, மீனவர் கூட்டுறவு சங்கத்துடன் இணைந்து, அணை வளாகத்திலேயே பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

சேலம் கிழக்கு மாவட்டத்தில் வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தியாப்பட்டணம், ஆத்துார், தலைவாசல் பகுதிகளிலும் ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளிலும்,  விவசாயிகளின் பண்ணை குட்டைகளிலும், மீன் வளர்ப்பு தொழிலை மேம்படுத்த மீன்வளர்ச்சித்துறை முடிவு செய்தது.

ADVERTISEMENT

இதனையடுத்து, மேட்டூர் அணையில் செயல்படுவதை போல, புழுதிக்குட்டை ஆணைமடுவு அணையிலும், 2009 ஆம் ஆண்டு ரூ.14 லட்சம் செலவில் சேலம் மாவட்டத்தின் இரண்டாவது பெரிய மீன்  விதைப் பண்ணையை மீன் வளர்ச்சித்துறை அமைத்தது. 2010 ஆம் ஆண்டில் இருந்து இந்த மீன் விதைப் பண்ணை செயல்பட்டு வருகிறது.

தொடர்ந்து 10 ஆண்டுகளாக இந்த மீன் விதைப்பண்ணையில், இந்திய சிறுரக கெண்டை விரலி, இதர கெண்டை விரலி, மிருகால், கட்லா, ரோகு உள்ளிட்ட 3 முதல் 4 லட்சம் வரை மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டு, மீன் வளர்க்கும் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் மீன் வளர்க்கும் கூட்டுறவு சங்கங்களுக்கு குறைந்த விலையில்  விதை மீன்குஞ்சுகள் விற்பனை செய்யப்படுகிறது.

நிகழாண்டு மொத்தம் 4 லட்சம் விதை மீன்குஞ்சுகளை உற்பத்தி செய்து,  விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 1.40 லட்சம் ருசியான மிருகால் ரக விதை மீன் குஞ்சுகள், மேட்டூர் அணை அரசு மீன் விதைப்பண்ணையில் இருந்து கொண்டு வரப்பட்டு, புழுதிக்குட்டை ஆணைமடுவு அணை விதைப் பண்ணையில் விட்டு 10 நாள்களாக வளர்க்கப்பட்டு வருகிறது. எதிர்வரும் 10 நாள்களில் இந்த மீன் குஞ்சுகள் விற்பனைக்கு வரும். இதனையடுத்து, அடுத்தடுத்து, ரோகு, கெண்டை, கட்லா, ஜிலேபி உள்ளிட்ட விதை மீன் குஞ்சுகளை வளர்த்து விற்பனை செய்ய மீன் வளர்ச்சித்துறை திட்டமிட்டுள்ளது.

இது குறித்து மீன் வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்து இரண்டாவது பெரிய மீன் விதைப்பண்ணை புழுதிக்குட்டை ஆணைமடுவு அணையில் உள்ளது. மீன் வளர்ப்புக்கேற்ற நீர்வளமும், தட்பவெட்ப நிலையும் நிலவுவதால், கடந்த 10 ஆண்டுகளாக இந்த மீன் விதைப்பண்ணையில் விதை மீன்குஞ்சுகள் வளர்த்து விற்பனை செய்யப்படுகிறது.
நிகழாண்டு 4 லட்சம் விதை மீன்குஞ்சுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, ருசி மிகுந்த1.40 லட்சம் மிருகால் ரக மீன் குஞ்சுகள் புழுதிக்குட்டை மீன் விதைப்பண்ணையில்  கடந்த 10 நாட்களாக வளர்க்கப்பட்டு வருகிறது. மீன் வளர்கும் விவசாயிகள், ஏரி,குளம்,குட்டைகளில் மீன் பிடி உரிமம் பெற்ற குத்தகைதாரர்கள் தங்களது  தேவைக்கு மீன்குஞ்சுகளை வாங்கிக் கொள்ளலாம். மீன் வளர்ப்பை ஊக்கப்படுத்தும் நோக்கில், ஆயிரம் மீன் குஞ்சுகளுக்கு ரூ.460 மட்டுமே விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. என்றார்.

புழுதிக்குட்டை ஆணைமடுவு அணையில் விதை மீன்குஞ்சுகள் வளர்க்கப்படும் மீன் விதைப்பண்ணை.

ADVERTISEMENT
ADVERTISEMENT