தற்போதைய செய்திகள்

மதுராந்தகம்: வீட்டு மின்னிணைப்பு கோரி குடும்பத்துடன் நூதனப் போராட்டம்

31st Jul 2020 04:22 PM

ADVERTISEMENT

மதுராந்தகம், ஜூலை 31: மதுராந்தகம் அருகே வீட்டில் மின்னிணைப்பு கொடுக்காமல் அலைக்கழித்ததால் தன் குடும்பத்துடன் கூலித் தொழிலாளி கண்ணில் கருப்பு துணி கட்டிக் கொண்டு போராட்டம் நடத்தினார்.

மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் மலை நகரைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சக்திவேல் (வயது 42). இவர் மலை நகரில் அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வாழ்ந்து வருகிறார். 

கடந்த 5 ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லாமல் மண் எண்ணெய் விளக்கு ஏற்றி வாழ்ந்துவருகிறார். இரவு நேரத்தில் பள்ளி குழந்தைகள் படிக்க முடியாமலும், தொலைக்காட்சியை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை பார்க்க முடியாமலும், வீட்டிலுள்ளோர் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.

இப்பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகளுக்கு மின் இணைப்பு, அரசின் வீட்டுமனைப்பட்டா போன்றவை உள்ளன. ஆனால் சக்திவேல் வாழ்ந்துவரும் வீட்டு  மனைக்கு மட்டும் பட்டா, மின்னிணைப்பு போன்றவை வழங்கப்படாமல் அரசு அலைக்கழித்து வந்துள்ளனர்.

ADVERTISEMENT

மின் இணைப்பு கோரி சக்திவேல் பல போராட்டங்களை குடும்பத்துடன் நடத்தி வந்துள்ளார். இருப்பினும் அவரது கோரிக்கையை அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளதாக தெரிய வருகிறது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தனது மனைவி, 3 குழந்தைகளுடன் கண்ணில் கருப்பு துணி கட்டி கொண்டு, மண்ணெண்ணெய் விளக்கு ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டார்.

தகவலறிந்த மதுராந்தகம் வட்டாட்சியர்  கனிமொழி மற்றும் வருவாய் துறையினர், காவல் துறையினர் நேரில் வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினரகள்.

இது தொடர்பாக உடனடியாக வீட்டுமனைப்பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படுவதாக வட்டாட்சியர் கனிமொழி தெரிவித்ததன் பேரில் தனது குடும்பத்துடன் சுமார் 5 மணி நேர போராட்டத்தை கைவிட்டார்.

Tags : Chengalpattu
ADVERTISEMENT
ADVERTISEMENT