தற்போதைய செய்திகள்

விவசாயி அணைக்கரை முத்து உடல் அடக்கம்

31st Jul 2020 04:28 PM

ADVERTISEMENT

அம்பாசமுத்திரம், ஜுலை 31: வனத்துறை விசாரணைக்குச் சென்ற நிலையில் உயிரிழந்த ஆழ்வார்குறிச்சி வாகைக்குளத்தைச் சேர்ந்த விவசாயி அணைக்கரை முத்து உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வாகைகுளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அணைக்கரை முத்துவை ஜூலை 22 இரவு கடையம் வனத்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்ற நிலையில் உயிரிழந்தார்.

வனத்துறையினர் தாக்குதலில் உயிரிழந்ததாகக் கூறி அணைக்கரை முத்துவின் உறவினர்கள் உடலை வாங்காமல் தவிர்த்து வந்தனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின் பேரில் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் மறு பிரேத பரிசோதனை செய்ய வலியுறுத்தி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு செய்திருந்தனர்.

அதற்கு மறு பிரேத பரிசோதனை செய்ய மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. இதையடுத்து மறுபிரேத பரிசோதனை இன்று காலை 11.30 மணியளவில் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தொடங்கியது. பரிசோதனை நிறைவடைந்து அணைக்கரை முத்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து வாகைக்குளத்திற்கு கொண்டு வரப்பட்ட உடலுக்கு உறவினர்கள், புதிய தமிழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்பட பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து வாகைக்குளத்தில் அமைந்துள்ள பேரூராட்சி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

Tags : tenkasi
ADVERTISEMENT
ADVERTISEMENT