உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே முல்லைப் பெரியாற்றில் இருந்து சட்டத்திற்குப் புறம்பான வகையில் குடிநீரை கடத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
தேனி மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு செல்லும் வழித்தடத்தில் இருந்து நேரடியாக ஆற்றுநீரை கடத்தி செல்வதால் குடிநீர் மற்றும் விவசாய பயன்பாட்டிற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், முல்லைப் பெரியாற்றில் இருந்து கோகிலாபுரம் வழியாக எரசக்கநாயக்கனூர் மலை அடிவாரப் பகுதிகளுக்கு குழாய்கள் மூலமாக தண்ணீர் கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்றன.
இதை கண்டித்து அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து அனுமதியின்றி சட்டத்திற்கு விரோதமான முறையில் முல்லைப் பெரியாற்றில் இருந்து தண்ணீர் நடத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரி சனிக்கிழமை இரவு 10 மணியளவில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்கு வந்த உத்தமபாளையம் காவல்துறையினர் சமாதானம் செய்து தொடர்ந்து சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
அப்போது, மாவட்டத்தில் சட்டவிரோதமாக தண்ணீர் கடத்தும் கும்பலை தடுத்து நிறுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.