திருப்பூர்: தளர்வில்லாத பொதுமுடக்கம் காரணமாக திருப்பூரில் 4 ஆவது வார ஞாயிற்றுக்கிழமையும் 100 சதவீத கடைகள் அடைக்கப்பட்டன.
கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதிலும் ஜூலை 5,12, 19, 26 ஆம் தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) தளர்வில்லாத பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்திருந்ததது.
இதன்படி திருப்பூர் மாநகரில் ஏற்கெனவே 3 வார ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லாத பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், திருப்பூர் மாநகரில் 4 ஆவது வாரமாக ஞாயிற்றுக்கிழமையும் 00 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இந்த பொதுமுடக்கத்தால் மாநகரில் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள குமரன் சாலை, காமராஜர் சாலை, புதிய பேருந்து நிலையம் பகுதி, பி.என்.சாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் 100 சதவீதக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
அதே வேளையில், ஒரு சில இடங்களில் மருந்தகங்கள், பால் விற்பனை நிலையம் மட்டும் சில மணி நேரம் திறக்கப்பட்டிருந்தது. மேலும், திருப்பூர் ரயில் நிலையம், வளர்மதி பாலம், மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல் துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், ஒரு சில இடங்களில் இரு சக்கர வாகனங்களில் சுற்றும் நபர்களையும் காவல் துறையினர் எச்சரித்து அனுப்பிவைத்தனர்.
மேலும், முகக் கவசம் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு காவல் துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.
திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் செயல்பட்டு வரும் சிறிய, பெரிய நிறுவனங்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.