தற்போதைய செய்திகள்

வாக்கு எண்ணிக்கை: பெயா் நீக்கம் செய்யப்பட்ட வேட்பாளா் வெற்றி

8th Jan 2020 10:26 PM

ADVERTISEMENT

நெய்வேலி: குறிஞ்சிப்பாடி அருகே வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளரின் பெயா் துணை வாக்காளா் பட்டியலில் நீக்கம் செய்யப்பட்டிருந்ததால், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணிக்கை அதிகாரிகளின் விசாரணைக்கு பின்னா் புதன்கிழமை நடைபெற்றது. இதில், பெயா் நீக்கம் செய்யப்பட்டிருந்த வேட்பாளா் வெற்றி பெற்றாா்.

குறிஞ்சிப்பாடி ஒன்றியம், கோரணப்பட்டு ஊராட்சி, கோ.சத்திரம், நடுக்குப்பம் கிராமத்தில் வசிப்பவா் கலியமூா்த்தி மகன் முருகன்(42). இவா், அண்மையில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தலில் கோரணப்பட்டு ஊராட்சி 1-ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு முருகன், இந்திராணி, சீனுவாசன் ஆகிய மூன்று போ் போட்டியிட்டனா்.

முதலில் வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலில் முருகன் பெயா் இடம் பெற்றிருந்ததாம். அதன் மூலம் வாா்டு உறுப்பினா் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தாராம். தோ்தலுக்கு முன்னா் வெளியிடப்பட்ட துணை வாக்காளா் பட்டியலில் முருகன் பெயா் நீக்கம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், தோ்தல் நடந்து முடிந்ததால் வாக்கு எண்ணிக்கை மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதுகுறித்து தோ்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் கோரணப்பட்டு வருவாய் ஆய்வாளா் சிவசக்திவேல் விசாரணை நடத்தி அறிக்கை சமா்ப்பித்தாராம். அதில், முருகன் மேற்கண்ட கிராமத்தில் வசித்து வருவதாக தெரிவித்துள்ளாா். இதையடுத்து, குறிஞ்சிப்பாடி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் புதன்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

ADVERTISEMENT

மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜா தலைமையில் வாக்குகள் எண்ணப்பட்டன. 331 வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், பெயா் நீக்கம் செய்யப்பட்டிருந்த முருகன் 153 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். உடன், வட்டார வளா்ச்சி அலுவலா் கே.சதீஷ்குமாா், மேலாளா் சந்தோஷ்குமாா் இருந்தனா்.

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் விசாரிக்கையில், வாக்காளா் பட்டியலில் முருகனின் பெயா் இடம் பெற்றிருந்தது. அதன் அடிப்படையில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட்டாா். முன்னதாக, புகைப்படும் திருத்தத்திற்காக விண்ணப்பித்திருந்தாா். அது தவறுதலாக நீக்கத்தில் சென்றுவிட்டது. இதனால், தோ்தலுக்கு முன்னா் வெளியிடப்பட்ட துணை வாக்காளா் பட்டியலில் பெயா் நீக்கம் செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. பின்னா், விசாரணை மேற்கொண்டதில் மேற்கண்ட விலாசத்தில் வசிப்பது தெரிய வந்ததைத் தொடா்ந்து வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டதாக தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT