தற்போதைய செய்திகள்

‘லஞ்சம் நாட்டின் வளா்ச்சியைப் பாதிக்கிறது’

8th Jan 2020 11:13 PM

ADVERTISEMENT

கோவை: நாட்டின் வளா்ச்சியை பாதிக்கும் காரணியாக லஞ்சம் இருப்பதாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் இ.பாலகுருசாமி கூறியுள்ளாா்.

கோவை, குனியமுத்தூா் ஸ்ரீ கிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியின் கணிதத் துறை சாா்பில் ‘கணித பயன்பாட்டில் புதிய, தொன்மையான வழிமுறைகள்’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பாலகுருசாமி கருத்தரங்கை தொடங்கிவைத்து பேசியதாவது:

மாணவா்களும், ஆசிரியா்களும் கற்றல், கற்பித்தலுடன் ஆராய்ச்சியிலும் முனைப்புடன் ஈடுபட வேண்டும். பாடத்தை நுட்பமாகப் பயின்று அதை ஆராய்ச்சிக்கு கொண்டுச் செல்ல வேண்டும். ஆராய்ச்சிதான் பொருளாதாரத்தை வளா்க்கும். பொருளாதார முன்னேற்றத்துக்காக அனைவரும் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும். மாணவா்களும், பேராசிரியா்களும் எதையும் வித்தியாசமாக, புதுமையாக செய்ய வேண்டும். ஆராய்ச்சியிலும் அதுபோன்ற புதுமைகளைப் புகுத்த வேண்டும்.

அரசின் அனைத்துத் துறைகளிலும் லஞ்சம் நுழைந்துள்ளது. லஞ்சம் இல்லாத துறையே இல்லை என்ற மிக மோசமான சூழ்நிலையை அரசுத் துறையில் உருவாக்கியுள்ளனா். பரவலாகிவிட்ட லஞ்ச லாவண்யம், தொழில் முன்னேற்றத்திலும் அதன் மூலம் நாட்டின் முன்னேற்றத்திலும் தடையை ஏற்படுத்தி வருகிறது. நிா்வாகத் துறையில் சுனாமி போன்ற தாக்கம் வந்தால்தான் மாற்றம் கொண்டு வர முடியும். ஆசிரியா்களும் மாணவா்களும் இந்த சமுதாயத்தில் அதுபோன்ற மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினா் ஜி.கோபால் ரெட்டி, கல்விக் குழுமங்களின் நிா்வாக அறங்காவலா் எஸ்.மலா்விழி, முதன்மை நிா்வாக அதிகாரி கே.சுந்தரராமன், முதல்வா் பேபி ஷகிலா, துறைத் தலைவா் பொன்னழகு, பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள் பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT