தற்போதைய செய்திகள்

குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஒரு இந்தியக் குடிமகனைக்கூட பாதிக்கவில்லை: வானதி சீனிவாசன்

8th Jan 2020 07:30 PM

ADVERTISEMENT

 

ஈரோடு: குடியுரிமைத் திருத்தச் சட்டம் எந்தவிதத்திலேயும் ஒரு இந்தியக் குடிமகனைக்கூட பாதிக்கவில்லை என பாஜக மாநில செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

 குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்து பாஜக சார்பில் ஈரோட்டில் பேரணி புதன்கிழமை மாலை நடைபெற்றது.  ஈரோடு வஉசி பூங்கா முன்பு நடந்த தொடக்க பேரணி தொடக்க நிகழ்வுக்கு மாநில வழக்குரைஞர் அணி அமைப்பாளர் என்.பி.பழனிசாமி தலைமை வகித்தார். ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் எஸ்.எ.சிவசுப்ரமணியன் கட்சியின் தேசிய செயலாளர் சுனில் தியோதார் தொடங்கிவைத்தார்.

தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் கே.எஸ்.நரேந்திரன், இளைஞரணி தேசிய துணைத்தலைவர் எ.பி.முருகானந்தம், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்டோர் பேசினர்.  

ADVERTISEMENT

பேரணியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கட்சியின் மாநில பொதுத்செயலாளர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
குடியுரிமைத் திருத்தச் சட்டம் எந்தவிதத்திலேயும் ஒரு இந்தியக் குடிமகனைக்கூட பாதிக்கவில்லை. திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், சிறுபான்மை மக்களை தூண்டிவிட்டு செய்கின்ற பொய் பிரசாரம், அரசியலை எல்லாம் மக்களுக்கு எடுத்துச்சொல்லும் நோக்கில் நாடு முழுவதும் பாஜக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருக்கிறது.

தமிழத்தில் நான்கு இடங்களில் பிரமாண்டமான பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டு சென்னையில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. புதன்கிழமை ஈரோட்டில் நடத்தப்பட்டது. வியாழக்கிழமை திருச்சி மற்றும் மதுரையில் நடைபெறவுள்ளது.

இவை இல்லாமல் வீடுதோறும் சென்று இந்த சட்ட திருத்தம் குறித்து உண்மை அம்சங்களை சொல்வதற்கும், மக்களை தொடர்புகொள்வதற்குமான பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. களத்தில் மக்களிடம் சென்று, இந்த தகவல்களை அவர்கள் புரிந்துகொள்ளும்போது, 100 சதவீதம் அவர்கள் பிரதமர் மோடிக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

ஒருபுறம் எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே மக்களை திசை திருப்புவதற்காகவும், தங்களுடைய அரசியல் வாழ்க்கைக்காகவும், இந்தப் பிரச்னையை வைத்து அரசியல் செய்துகொண்டிருக்கின்றனர். இதைப்பற்றியெல்லாம் ஒவ்வொரு சிறிய கிராமங்களில் இருந்து மிகப்பெரிய நகரங்கள் வரை அத்தனை மக்களையும் தொடர்புகொள்வதற்காக பாஜக இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது.

தமிழகத்தில் பாஜக கூட்டணி கட்சிகள் அனைத்தும், நாடாளுமன்றத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதாவை ஆதரித்துள்ளன. இந்த பேரணி முழுக்க பாஜகவால் ஏற்பாடு செய்யப்பட்டதாகும். சென்னையில் நடந்த பேரணியில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இதுபோல் வாய்ப்புள்ள இடங்களில் பாஜக நடத்தும் பேரணியில் கூட்டணிக் கட்சியினர் பங்கேற்றனர்.  சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றுவருதால் ஆளும் கட்சியினர், அவர்களது இயலாமையை தெரிவித்துள்ளனர்.  இந்த விஷயத்தில் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் மிகத் தெளிவாக பிரதமர் மோடியை ஆதரித்துக்கொண்டிருக்கின்றனர்.

உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் வெற்றிபெற்றுள்ளதன் மூலம் கிராமங்களிலும் பாஜக எழுச்சி இப்போது தெரிய ஆரம்பித்துள்ளது. கட்சியின் மாநிலத் தலைவர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்றார்.

பேரணி வஉசி பூங்காவில் தொடங்கி மேட்டூர் சாலை, அரசு மருத்துவமனை, பெருந்துறை சாலை, ஆட்சியர் அலுவலகம் வழியாக சம்பத் நகரில் முடிவடைந்தது. கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பேரணியில் பங்கேற்றனர். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT