தற்போதைய செய்திகள்

வடகிழக்கு தில்லியில் 5 மெட்ரோ நிலையங்கள் திறப்பு: வழக்கமான சேவை தொடங்கியது

26th Feb 2020 10:52 AM

ADVERTISEMENT


புதுதில்லி: தில்லியில் தொடந்து நிகழ்ந்து வந்த போராட்டங்கள் காரணமாக மூடப்பட்டிருந்த வடகிழக்கு தில்லியின் ஐந்து மெட்ரோ நிலையங்கள் புதன்கிழமை திறக்கப்பட்டு வழக்கமான சேவை தொடங்கி உள்ளதாக தில்லி மெட்ரோ ரயில் கழகம் தெரிவித்துள்ளது.

சிஏஏவுக்கு எதிராக வடகிழக்கு தில்லியில் ஜாஃப்ராபாத் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சனிக்கிழமை இரவு திடீரென சாலை மறியல் தொடங்கியது. இப்போராட்டத்துக்கு பதிலடியாக ஜாஃப்ராபாத் அருகில் உள்ள மெளஜ்பூர் பகுதியில் சிஏஏ ஆதரவுப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது, இருதரப்பினரும் கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்தப் பகுதியில் திங்கள்கிழமையும் வன்முறை ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். 

இந்நிலையில், ஜாஃப்ராபாத், மெளஜ்பூர், பஜன்புரா, சந்த்பாக் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமையும் வன்முறை நீடித்தது. இதன் காரணமாக நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர மெளஜ்பூர், பிரம்மபுரி, கஜோரி காஸ், பஜன்புரா உள்ளிட்ட பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வன்முறைப் பகுதிகளில் போலீஸார் கொடி அணிவகுப்பு நடத்தினர். எனினும், ஆங்காங்கே வன்முறை தொடர்ந்து ஏற்பட்டது. வன்முறையாளர்கள் அப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும், கடைகளுக்கும், பொது சொத்துகளுக்கும் தீ வைத்து எரித்தனர். மேலும் போலீஸார் மீது கற்களை வீசி தாக்கினர். 

தொடர் வன்முறைகளை அடுத்து வடகிழக்கு தில்லியில் உள்ள ஜாஃப்ராபாத், மெளஜ்பூர், பாபர்பூர், கோகுல்பூரி, கஜோரி காஸ் மற்றும் சிவ் விஹார் ஆகிய தில்லி மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டன.

ADVERTISEMENT

தொடர் வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து தில்லியில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டது. போராட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்ட அனைத்து பகுதிகளிலும் ஆயுதம் தாங்கிய போலீஸார் குவிக்கப்பட்டனர். இதனால் போராட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேறினர். புதன்கிழமை யாரும் அப்பகுதியில் போராட்டம் நடத்த வரவில்லை.  அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் எதுவும் இல்லாம் வெறிசோடி காணப்பட்டது. போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

இந்தநிலையில், பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, தொடர் வன்முறை காரணமாக மூடப்பட்டிருந்த மெட்ரோ ரயில்நிலையங்கள் புதன்கிழமை திறக்கப்பட்டு வழக்கான சேவை தொடங்கி உள்ளதாக தில்லி மெட்ரோ ரயில் கழகம் தெரிவித்துள்ளது. 

தில்லி குற்றவியல், காவல்துறை சிறப்பு ஆணையர் சதீஷ் கோல்சா கூறியதாவது:  சிஏஏ எதிர்ப்பாளர்கள் ஜாஃப்ராபாத் மற்றும் மெளஜ்பூர் பகுதியில் இருந்து வெளியேறியுள்ளதாகவும், தற்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதாக கூறினார். 

வன்முறையில் குறைந்தது இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 190 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT