தற்போதைய செய்திகள்

தில்லியில் தொடரும் வன்முறை: பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு

26th Feb 2020 10:12 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: வடகிழக்கு தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்ட (சிஏஏ) ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறைகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளதாக ஜிடிபி அரசு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு துப்பாக்கி குண்டு காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.  இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் 11 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இந்த வன்முறையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் குண்டடிபட்டு அபாய நிலையில் உள்ளார். 

சிஏஏவுக்கு எதிராக வடகிழக்கு தில்லியில் ஜாஃப்ராபாத் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சனிக்கிழமை இரவு திடீரென சாலை மறியல் தொடங்கியது. இப்போராட்டத்துக்கு பதிலடியாக ஜாஃப்ராபாத் அருகில் உள்ள மெளஜ்பூர் பகுதியில் சிஏஏ ஆதரவுப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது, இருதரப்பினரும் கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்தப் பகுதியில் திங்கள்கிழமையும் வன்முறை ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். 

இந்நிலையில், ஜாஃப்ராபாத், மெளஜ்பூர், பஜன்புரா, சந்த்பாக் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமையும் வன்முறை நீடித்தது. இதன் காரணமாக நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர மெளஜ்பூர், பிரம்மபுரி, கஜோரி காஸ், பஜன்புரா உள்ளிட்ட பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வன்முறைப் பகுதிகளில் போலீஸார் கொடி அணிவகுப்பு நடத்தினர். எனினும், ஆங்காங்கே வன்முறை தொடர்ந்து ஏற்பட்டது. வன்முறையாளர்கள் அப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும், கடைகளுக்கும், பொது சொத்துகளுக்கும் தீ வைத்து எரித்தனர். மேலும் போலீஸார் மீது கற்களை வீசி தாக்கினர். இதனால் சாலைகள் முழுவதும் கற்கள் சிதறிக் கிடந்தன.

ADVERTISEMENT

இதற்கிடையே, திங்கள்கிழமை நடைபெற்ற கல்வீச்சில் சிக்கி உயிரிழந்த தில்லி தலைமைக் காவலர் ரத்தன் லாலின் இறுதிச் சடங்குகள் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. 

இச்சூழலில், ஜாஃப்ராபாத் பகுதியில் காவல் துறை மீதும், பொதுமக்கள் மீதும் திங்கள்கிழமை துப்பாக்கியால் சுட்டவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் தில்லி ஷாதரா பகுதியைச் சேர்ந்த ஷாருக் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

தில்லி காவல் துறையின் (சட்டம் -ஒழுங்கு) சிறப்பு ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி எஸ்.என். ஸ்ரீவத்ஸவா நியமிக்கப்பட்டுள்ளார். சிஆர்பிஎஃப்-யில் சிறப்பு டிஜியாக இருந்த அவரை உடனடியாக தில்லி காவல் துறைக்கு நியமனம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, வடகிழக்கு தில்லியில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு புதன்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நேற்று செவ்வாய்க்கிழமை முதல் வடகிழக்கு தில்லியில் இருந்து காசியாபாத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளையும் போலீஸார் தடுப்புகளை வைத்து சீல் வைத்துள்ளனர்.

"தில்லியில் நடந்த வன்முறையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எல்லைகளுக்கு சீல் வைத்துள்ளோம். எங்கள் மாவட்டத்தில் அமைதி நிலவுகிறது. அருகிலுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூடியுள்ளோம் " என்று மாவட்ட ஆட்சியர் அஜய் குமார் பாண்டே தெரிவித்துள்ளார்.

வன்முறையில் காயமடைந்த துணை போலீஸ் ஆணையர் ஷாஹ்தாரா குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷர்மா அவரது உடல்நிலை குறித்து விசாரித்துள்ளார்.

முன்னதாக செவ்வாய்க்கிழமை தில்லி காவல்துறை மற்றும் அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கடந்த இரண்டு நாட்களாக தலைநகர் தில்லியில் நடைபெற்று வரும் வன்முறை சம்பங்கள் குறித்து துணைநிலை ஆளுநர் அனில் பைஜால், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், போலீஸ் ஆணையர் அமுல்யா பட்நாயக் மற்றும் அரசியல் தலைவர்களிடமும் கேட்டறிந்தார் அமித் ஷா.

ADVERTISEMENT
ADVERTISEMENT