தற்போதைய செய்திகள்

ஊராட்சி பெண் தலைவர்களின் உரிமையில் யாரும் தலையிடக்கூடாது: கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ எச்சரிக்கை

22nd Feb 2020 08:15 PM

ADVERTISEMENT


கும்மிடிப்பூண்டி: ஊராட்சி பெண் தலைவர்கள் மட்டுமே ஊராட்சியை நிர்வாகம் செய்ய வேண்டும், அவர்களை சுயமாக செயல்பட விடுவதன் மூலமாக மட்டுமே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் அறிமுகப்படுத்திய பெண்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக செயப்படுத்த முடியும் என்பதால் ஊராட்சி பெண் தலைவர்களின் கணவர் மற்றும் உறவினர்கள் கவனமாக செயல்பட வேண்டும் என கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற ஊராட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் எச்சரித்தார்.

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட 61 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார், ஒன்றிய ஆணையர் சாமிநாதன், ஒன்றிய பொறியாளர் நரசிம்மன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ள புதுவாயல் ஊராட்சி தலைவர் அற்புதராணி சதீஷ்குமார், தோக்கம்மூர் ஊராட்சி தலைவர் ராதாகிருஷ்ணன், புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி தலைவரான 22 வயதே நிரம்பிய டாக்டர் அஷ்வினி சுகுமாறனை வாழ்த்தியவர் அனைத்து ஊராட்சி தலைவர்களும் அவரவர் பணிகளை சிறப்பாக செய்திட வேண்டும், கோடை காலத்தில் குடிநீர் பிரச்சனை ஏற்படாமல் இருக்க இப்போதே மன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும், ஊராட்சி தலைவர்கள் அந்தந்த வார்டு கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்களை அரவணைத்து செல்ல வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.

ADVERTISEMENT

தொடர்ந்து ஊராட்சி தலைவர்களை எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் பேச அழைத்த போது பெண் ஊராட்சி தலைவர்களுக்கு பதிலாக அவர்களது கணவர்கள் பேச வந்தனர். அப்போது குறிக்கிட்டு பேசிய எம்.எல்.ஏ கே.எஸ்.விஜயகுமார் பெண்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ளாட்சியில்  பெண்களுக்கு  50 சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்தார். இந்நிலையில் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் 62சதவீதம் பேர் பெண் தலைவர்களாக உள்ளனர்.

இந்த சூழலில் பெண் தலைவர்களை அவர்களது கணவர்கள் பேச கூட அனுமதிக்காமல் போவது அவர்களை சுயமாக செயல்பட விடாமல் இருப்பது போன்றதாகும், பெண் தலைவர்களை சுயமாக செயல்பட விடுவதன் மூலமே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் அறிமுகப்படுத்திய பெண்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக செயப்படுத்த முடியும். பெண்களின் சமூக நிலையும் உயரும் என்பதால் ஊராட்சி பெண் தலைவர்களின்  கணவர் மற்றும்  உறவினர்கள் கவனமாக செயல்பட வேண்டும் என எச்சரித்தார்.

தொடர்ந்து கூட்டத்தில் பேசிய மாநெல்லூர் ஊராட்சி தலைவர் லாரன்ஸ் மாநெல்லூரில் உள்ள 200 ஏக்கர் பரப்பிலான ஏரியை ஆழப்படுத்தி தூர் வாரி தடுப்பணை அமைப்பதன் மூலம், எல்லையோர ஆந்திர பகுதியில் இருந்து வரும் மழை  நீரை சேமித்து 1000 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த முடியும் என்று கோரிக்கை வைத்தார்.

தண்டலச்சேரி ஊராட்சி தலைவர் ஆனந்தராஜ் அப்பகுதியில் 3ஆண்டுகளுக்கு முன்பு அகற்றப்பட்ட நடுநிலைப்பள்ளி கட்டிடம் இருந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டி தரவேண்டும்  என்றார். புதுகும்மிடிப்பூண்டி தலைவர் டாக்டர் அஷ்வின் சுகுமாறன் பேசும் போது அப்பகுதியில் 24 மணி நேரம் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலைய வசதி ஏற்படுத்த கோரினார்.

பன்பாக்கம் ஊராட்சி தலைவர் சீனிவாசன் பேசும் போது விவசாய நிலங்களுக்கு இலவச மின்சாரம் அரசு வழங்குகிறது, இதில் நிலச்சுவான்தார்கள் கூட பயன்பெறுகின்றனர். இந்நிலையில் ஊராட்சிக்கு அதிக செலவீனமாக மின் கட்டணம் உள்ள நிலையில், ஊராட்சிக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்தை இலவசமாக வழங்க எம்எல்ஏ சட்டமன்ற கூட்டத்தில் பேசி முதல்வர் மூலம் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்றார்.

தேர்வாய் ஊராட்சி தலைவர் முனிவேல் பேசும் போது அப்பகுதியில் விவசாய நிலங்களில் 20 உயர் மின் அழுத்த மின் கோபுரங்கள் உள்ள நிலையில் விவசாயத்தை காக்க விவசாய நிலங்களில் மின் கோபுரங்களை அகற்ற வேண்டும், கண்ணன்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மாதர்பாக்கம் ஊராட்சி தலைவர் சீனிவாசன் பேசும் போது அப்பகுதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரம் மருத்துவர் பணியில் இருப்பது, ஸ்கேன் வசதி செய்து தருவது போன்ற கோரிக்கைகளை முன்வைத்தார்.

நத்தம் ஊராட்சி தலைவர் கலைமதி சங்கர் பேசும் போது அப்பகுதியில் பேருந்து  சேவை தேவை என்றும், கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலை அகலப்படுத்தும் பணி 5 ஆண்டுகளாக நடைபெறும் சூழலில் தொடர் விபத்துகள் நடைபெறுவதாகவும்,கடந்த ஆண்டு தனது கணவரே விபத்தில் பலியான நிலையில் தொடர்ந்து உயிர் பலிகளை தடுக்கும் வகையில் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்,

தொடர்ந்து கூட்டத்தில் எகுமதுரை ஊராட்சி தலைவர் ஸ்ரீபிரியா மகேந்திரன், சுண்ணாம்புகுளம் ஊராட்சி தலைவர் ரவி, பூவலம்பேடு ஊராட்சி தலைவர் வெங்கடாசவபதி, கண்ணம்பாக்கம் ஊராட்சி தலைவர் சதீஷ், அயநெல்லூர் ஊராட்சி தலைவர் லலிதா கல்விச்செல்வம், கரடிப்புத்தூர் ஊராட்சி தலைவர் ஹரிதா, புதுவாயல் ஊராட்சி தலைவர் அற்புதராணி சதீஷ்குமார் உள்ளிட்டோர் பேசினார்கள்,

கூட்ட முடிவில் பேசிய எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார், ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார் ஊராட்சி பிரச்னைகள் குறித்து ஊராட்சி தலைவர்கள் எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்றும், ஊராட்சிகளின் தேவைகளை நிவர்த்தி செய்ய பல்வேறு நிதி ஆதாரங்களை  பெற்று ஊராட்சிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT