தற்போதைய செய்திகள்

7 பேர் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசு வழக்குரைஞரின் கருத்துக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் கண்டனம் 

22nd Feb 2020 02:56 PM

ADVERTISEMENT

 

விழுப்புரம்: 7 பேர் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசு வழக்குரைஞரின் கருத்துக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அமைச்சர் சி.வி. சண்முகம், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  ஏழுபேர் விடுதலை தொடர்பான வழக்கில் மத்திய அரசு வழக்குரைஞர் நீதிமன்றத்தில், மத்திய அரசு முடிவெடுக்கும் வரை தமிழக அரசின் கடிதம் பூச்சியம் என தெரித்தது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், 7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய அரசு வழக்குரைஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தன்னுடைய வரம்பை மீறி பேசி இருக்கிறார். இந்தக் கருத்தை அவர் தெரிந்தே சொன்னாரா என்று தெரியவில்லை. மத்திய அரசின் கீழ் வரும் குற்றங்களுக்கு மத்திய அரசினுடைய அனுமதியைப்பெற வேண்டும் என ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

ADVERTISEMENT

குற்றம் சாட்டப்பட்டவரின் கருணை மனு ஆளுநரிடம் இருக்கும் போது அது தொடர்பாக ஆளுநர் உத்தரவு பிறப்பிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில்தான் தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி தமிழகத்தினுடைய முடிவை ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது.

இதில், ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும். இதில் மத்திய அரசை கேட்க வேண்டும் என்று எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவு எடுக்க முழு உரிமை ஆளுநருக்கு உள்ளது. இதில் ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டும். இதில் மத்திய அரசினுடைய வழக்குரைஞர் நீதிமன்றத்தில் வழக்கு என்று வருகிறபோது வேண்டுமென்றே தேவையற்ற, தகுதியற்ற குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார். இது கண்டனத்திற்குரியது. மாநில அரசின் அதிகாரத்தை கேள்வி கேட்கும் அதிகாரத்தை அவருக்கு யார் கொடுத்தது. மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பி இருக்கிறோம். ஆளுநர் இந்த காலக்கெடுவுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என எந்த காலக்கெடுவும் கிடையாது. அதனால் நல்ல முடிவாக எடுப்பார் என தமிழக அரசு நம்புகிறது. மத்திய அரசு வழக்குரைஞர் சொன்ன வார்த்தை கண்டனத்திற்குரியது என்று சி.வி. சண்முகம் கூறினார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT