தற்போதைய செய்திகள்

ஈரோடு அருகே கார் விபத்தில் 2 பெண்கள் பலி: 7 மாத குழந்தை உள்பட 8 பேர் படுகாயம்

22nd Feb 2020 03:44 PM

ADVERTISEMENT


ஈரோடு: ஈரோடு அருகே இரண்டு கார்கள் மோதிக்கொண்டதில் 2 பெண்கள் பலியாகினர்.  7 மாத குழந்தை உள்பட 8 பேர் படுகாயமடைந்தனர்.

சேலம் மாவட்டம் பழைய சூரமங்கலம் ,அண்ணா தெருவைச் சேர்ந்தவர் விஜயவர்மன். இவரது மனைவி கவுரி (35).  இவர்களுக்கு தேவதிசா என்ற 7 மாத பெண் குழந்தை உள்ளது.  இவரது உறவினர்கள் ஜோதி (55),  சுவர்ணலகரி (19), ஜீவிதா (23),  அனுஷ்யா தேவி (25),  சுபாதேவி (39),  லட்சுமி (50),  மித்ரா (7)   ஆகியோர் வெள்ளிக்கிழமை காலை கார் மூலம் சேலத்தில் இருந்து கோவை வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா யோக மையத்திற்கு சென்று அங்கு நடைபெற்ற சிவராத்திரி விழாவில் பங்கேற்றனர்.

பின்னர்  இவர்கள் அனைவரும் நள்ளிரவில் கோவையில் இருந்து சேலம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். காரை நவீன் குமார் என்பவர் ஓட்டி வந்தார்.

கார் இன்று நள்ளிரவு 1.30 மணிக்கு ஈரோடு மாவட்டம் நசியனூர் அடுத்த ஆட்டையாம்பாளையம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடத் தொடங்கியது.

ADVERTISEMENT

பின்னர் சாலையின் மத்தியில் இருந்த தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு எதிரே சாலையில் வந்துகொண்டிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளனாது. இந்த விபத்தில் கவுரி  சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்ற அனைவரும் படுகாயமடைந்தனர். 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சித்தோடு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஜோதி இறந்தார்.  படுகாயமடைந்த நவீன்குமார் , ஜீவிதா, அனுசுயா தேவி, லட்சுமி சுபா தேவி, சுவர்ணலகரி,  மித்ரா(7), மற்றும் ஏழு மாத குழந்தை தேவதிசா ஆகியோர் ஈரோடு அரசு மருத்துமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மற்றொரு காரில் வந்த கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த உசேன் மோன் (38),  உறவினர் முஸ்தபா ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கார் மோதியதில் முன்பகுதி மட்டும் சேதம் அடைந்திருந்தது.
 
இதுகுறித்து சித்தோடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT