தற்போதைய செய்திகள்

விழுப்புரம் புறவழிச்சாலையில் அடுத்தடுத்து வந்த 4 வாகனங்கள் மோதி விபத்து: ஓட்டுநர்கள் மருத்துவமனையில் அனுமதி

13th Feb 2020 10:56 AM

ADVERTISEMENT


திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து மீது, பின்னால் வந்த மினி லாரி விழுப்புரம் புறவழிச்சாலை பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.

இன்று அதிகாலை நடந்த இந்த விபத்தில், அந்த மினி லாரி சாலை தடுப்பை கடந்து எதிர்புறம் சாலையில் வந்த கேஸ் டேங்கர் லாரி மீது மோதியது.

அதே நேரத்தில் கேஸ் டேங்கர் லாரி பின்னால் வந்த மினி லாரியும் டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

ADVERTISEMENT

இந்த நான்கு வாகனங்களும் மோதிக்கொண்ட விபத்தில் கேஸ் டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்ததால் பெரும் அச்சம் ஏற்பட்டது.

இதனையடுத்து தகவலறிந்து வந்த விழுப்புரம் டிஎஸ்பி சங்கர் தலைமையிலான போலீஸார், திருச்சி சென்னை மார்க்க வாகனங்களை ஜானகிபுரம் புறவழிச்சாலை வழியாக திருப்பி அனுப்பினர்.

விபத்தில் சிக்கிய வாகனங்களை ராட்சத கிரேன்கள் மூலம் இரண்டு மணி நேர போராட்டத்துக்கு பின் அப்புறப்படுத்தினர்.

இதனிடையே விழுப்புரம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கேஸ் டேங்கர் லாரி மீது தண்ணீரை அடித்து தீ விபத்து ஏற்படாமல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் நான்கு வாகன ஓட்டுநர்களும் பலத்த காயமடைந்தனர். மினி லாரி ஓட்டுநர்கள் இருவர் ஆபத்தான நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரத்தில் அதிகாலை அடுத்தடுத்து வந்த 4 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் கேஸ் டேங்கர் லாரியும் கவிழ்ந்ததால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT