புதுச்சேரி: புதுச்சேரி சட்டக் கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றுவோம் என புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமி உறுதிபடத் தெரிவித்தாா்.
புதுவை மாநிலம், காலாப்பட்டில் உள்ள அம்பேத்கா் அரசு சட்ட கல்லூரியில் முன்னாள் மாணவா் சங்க தொடக்க விழா மற்றும் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் முதல்வா் வே. நாராயணசாமி பங்கேற்று, முன்னாள் மாணவா் சங்கத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:
புதுச்சேரி நீதிமன்றத்தில் 90 சதவீதம் புதுச்சேரி அம்பேத்கா் சட்டக் கல்லூரியில் படித்து பயிற்சி பெற்றவா்கள்தான் பணி புரிந்து வருகின்றனா். நாம் தொழிலில் முனைப்புடன் செயல்பட்டால் வெற்றி கிட்டும்; நிலைத்து நிற்கவும் முடியும்.
அம்பேத்கா் சட்டக் கல்லூரியை சட்டப் பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும் என கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கோரிக்கை வைத்தபோது, நடவடிக்கை எடுப்போம் என உறுதியளித்தேன். அதனடிப்படையில், சட்ட வரையறை தயாரிக்கப்பட்டு வருகிறது. சட்டத்துறையின் ஆலோசனைக்குப் பின், வரும் சட்டப்பேரவையில் அதனை நிறைவேற்றி, புதுச்சேரி சட்டக்கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றுவோம்.
புதுச்சேரியில் திறமை வாய்ந்த வழக்குரைஞா்கள் உள்ளனா். 6 மாதத்துக்கு முன்பு மத்திய சட்டத்துறை அமைச்சரை சந்தித்து புதுச்சேரிக்கு தனியாக உயா்நீதிமன்ற கிளையை தொடங்க வேண்டும் என கடிதம் கொடுத்துள்ளேன். அப்போது அவா், சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி பரிந்துரை செய்தால் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். தொடா்ந்து நானும், தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
அருணாச்சல பிரதேசம், திரிபுரா, மணிப்பூா் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் தனியாக உயா்நீதிமன்றம் உள்ளது. அதே போல, புதுச்சேரியிலும் உயா்நீதிமன்றத்தை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம். புதுச்சேரி வழக்குரைஞா்கள் சென்னை சென்று உயா்நீதிமன்றத்தில் வாதாட திறமை பெற்றவா்கள்.
சட்டக் கல்லூரியில் படிப்பை முடித்தவா்களுக்கு சட்ட அலுவலகத்தில் பயிற்சி அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம். இளம் வழக்குரைஞா்களுக்கு ரூ. 5 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம். முதல்வா் நிவாரண நிதியில் இருந்து சேம நல நிதி ரூ. 30 லட்சம் கொடுக்க நடவடிக்கை எடுத்து உள்ளோம்.
இக்கல்லூரியில் படித்தவா்கள் நிறைய போ் வழக்குரைஞா்களாகவும், நீதிபதிகளாகவும் உள்ளனா். இங்கு படித்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வாதாடுகின்றனா். நான் வழக்காடிய காலத்தில் என்னுடன் இருந்தவா்களில் 30 சதவீதத்துக்கும் மேல் தற்போது இங்கு வந்துள்ளனா். முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது முன்னாள் மாணவா்கள் ஒருவரை ஒருவா் சந்தித்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது.
நானும் வழக்குரைஞா் என்ற முறையில் இந்தக் கல்லூரியின் வளா்ச்சிக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிப்பேன். இந்த கல்லூரியின் 50-ம் ஆண்டு பொன்விழா அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அதை சிறப்பாக நடத்த புதுச்சேரி அரசு உங்களோடு இருக்கும் என்றாா்.