தற்போதைய செய்திகள்

குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு: மேலும் 2 பேர் கைது

2nd Feb 2020 02:43 PM

ADVERTISEMENT


சென்னை: குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி, பெண் அதிகாரி சுதாராணி மற்றும் ஆண் அதிகாரி விக்னேஷ் என 2 பேரை கைது செய்துள்ளனர்.

தமிழக அரசின் 41 துறைகளில் காலியாக இருந்த 1953 குரூப் 2ஏ பணியிடங்களுக்கு தேவையான ஊழியர்களை தேர்வு செய்யும் செய்யும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26-ஆம் தேதி தேர்வு நடத்தியது. இத் தேர்வை 5.56 லட்சம் பேர் எழுதினர். இத் தேர்வின் முடிவு கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டது.

இத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரும் இப்போது அரசு பணிகளில் உள்ளனர். இந்த தேர்வு முடிவு வெளியானவுடன், தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார்கள் கூறப்பட்டு வந்தன. ஆனால் அந்த புகார்கள் எந்த விசாரணையும் செய்யப்படவில்லை.

 இந்நிலையில்,தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்து, 16 பேரை கைது செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணையில் கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 ஏ தேர்விலும் முறைகேடு நடைபெற்றது தெரியவந்தது.

ADVERTISEMENT

அதேவேளையில் குரூப் 2 ஏ தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும்,அது தொடர்பான விசாரணை செய்வதற்க்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்வர்களும்,கல்வியாளர்களும் மீண்டும் வலியுறுத்தினர்.

இதையடுத்து குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கும்படி தேர்வாணைய அதிகாரிகள், சிபிசிஐடியில் வெள்ளிக்கிழமை புகார் செய்தனர். மேலும் வழக்குக்கு தேவையான ஆவணங்களையும் அவர்கள், சிபிசிஐடியிடம் உடனடியாக ஒப்படைத்தனர். இதன் அடிப்படையில் சிபிசிஐடி அதிகாரிகள் குரூப் 2 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக 42 பேர் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

இவர்கள் அனைவரும் ராமேசுவரத்தில் மையத்தில் தேர்வு எழுதி குரூப் 2 ஏ தேர்வில் அதிக மதிப்பெண்கள் தேர்ச்சி பெற்றவர் ஆவார்கள். இந்த வழக்குத் குறித்து சிபிசிஐடி அதிகாரிகள், கடந்த இரு நாள்களாக தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விசாரணையில் ஏற்கெனவே குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் தேடப்பட்டு வரும், சென்னை பெருநகர காவல்துறையின் புதுப்பேட்டை ஆயுதப்படையில் காவலராக பணிபுரியும் சிவகங்கை மாவட்டம் பெரியகண்ணூரைச் சேர்ந்த சித்தாண்டிதான், குரூப் 2 ஏ தேர்விலும் முறைகேட்டிலும் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இவர் இத் தேர்வர்களிடம் தேர்ச்சி பெற வைப்பதற்கு ரூ.13 லட்சம் வரை பணம் பெற்றிருப்பதையும் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையில் கண்டறிந்தனர். மேலும் சித்தாண்டி, தனது சகோதரர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் கா.வேல்முருகன் (30) என்பவரையும், இத் தேர்வை எழுத வைத்து முறைகேடு தேர்ச்சி பெறச் செய்து அரசு பணியில் சேர்ந்திருப்பதும் தெரியவந்தது.

இதேபோல சித்தாண்டியிடம் பணம் கொடுத்து குரூப் 2 ஏ தேர்வில் தேர்ச்சி பெற்ற விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த முத்துவின் மனைவி திருநெல்வேலி மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் ஜெயராணி (30) என்பவரும் பணியில் சேர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கெனவே இவர்கள் இருவரையும் பிடித்து, சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில வைத்து விசாரித்து வந்தனர். இதில் முறைகேடு தொடர்பாக பல்வேறு புதியத் தகவல்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் போலீஸார், வேல்முருகனையும், ஜெயராணியையும் சனிக்கிழமை கைது செய்தனர். ஜெயராணியின் கணவர் முத்துவும் தமிழக காவல்துறையில் காவலராக பணிபுரிவது குறிப்பிட்டதக்கது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கும் சித்தாண்டி உள்ளிட்ட சில இடைத்தரகர்கள் மீது கூட்டுச்சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில், குரூப் 2ஏ தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரி சுதாராணி, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை அதிகாரியாக பணியாற்றி வரும் விக்னேஷ் ஆகிய 2 பேரையும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர் .

இடைத்தரகர் ஜெயகுமாரின் கார் ஓட்டுநரான சம்பத் மனைவி தான் திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரி சுதா ராணி. 

Tags : TNPSC Scam
ADVERTISEMENT
ADVERTISEMENT