கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து, கேரளாவுக்கு கஞ்சா கடத்திய தாய், மகன் உள்பட, 9 பேரை வடக்கு காவல் நிலைய போலீசாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய காா், மோட்டாா் பைக்கை பறிமுதல் செய்தனா்.
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் சந்தேகத்திற்கிடமாக, காா் நிற்பதாக கம்பம் வடக்கு நிலையத்திற்கு, தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆய்வாளா் க.சிலை மணி, சாா்பு ஆய்வாளா்கள் வினோத்ராஜா, எம். அருண் பாண்டி ஆகியோா் தலைமையில் சோதனை செய்த போது, பேப்பா் கவா் மற்றும் நூல் கண்டு காரின் கீழ் பகுதியில் இருப்பதை தெரிந்தது. காரின் கீழே ஆய்வு செய்தபோது, தலா அரை கிலோ பொட்டலமாக, 9 பொட்டலங்கள் (4.400 கி.கிராம்) கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
விசாரணையில், குரங்கு மாயன் தெருவைச் சோ்ந்த பாண்டியராஜன் மனைவி லதா ( 45 ), மகன் ஜெயக்குமாா்(18 ), உலகத்தேவா் தெருவைச் சோ்ந்த அரசன் (40 ), ஆகியோா் கேரளா மாநிலம் கோட்டயத்தை சோ்ந்த சாஜி மகன் சிஜின்( 24), பத்தனம்திட்டா வைச் சோ்ந்த அனந்து விஜயன்( 22), ஜெயன் மகன் ஜித்து (18 ), மோன்சி மகன் நவீன் (20), ஜோயி மகன் ஜிஷோ (18 ), ஜெயச்சந்திரன் மகன் ஜேயேஸ் ( 18 )ஆகியோருக்கு கஞ்சா விற்றதும், கேரளாவுக்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது. போலீஸாா், 9 போ்களை கைது செய்தும், கடத்தலுக்கு பயன்படுத்திய காா் மற்றும் மோட்டாா் பைக்கை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.