குஜராத் மாநிலத்தில் நாளை கடைகளை அடைக்க கட்டாயப்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஹரியாணா மாநில விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியாக வந்து கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தில்லி போராட்டக் குழு சார்பில் டிசம்பர் 8(நாளை) நாடு தழுவிய முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்தனர்.
இதனை தொடர்ந்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (என்சிபி), இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் குஜராத் மாநில முதல்வர் வெளியிட்ட செய்தியில்,
குஜராத் மாநிலம் முழு அடைப்பை ஆதரிக்கவில்லை. மேலும் கடைகள் மற்றும் மற்ற நிறுவனங்களை மூடக்கோரி யாரேனும் கட்டாயப்படுத்தினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.