உத்தரபிரதேசத்தில் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டுருந்த இரு சிறுவர்களிடையே சண்டை ஏற்பட்டதால் ஏழு வயது சிறுவன், நான்கு வயது சிறுவனைக் கத்தியால் குத்தினார்.
உத்தரபிரதேசம் நவாப்கஞ்ச் அருகே உள்ள சோபுலா பகுதியில் இரு குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் இரு குடும்பத்தினரும் கூலித் தொழிலாளர்கள் மற்றும் உறவினர்கள் ஆவர்.
அவர்களின் குழந்தைகள் இரண்டு நாள்களுக்கு முன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சிறுவர்கள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அதில் கோபமடைந்த ஏழு வயது சிறுவன் தனது வீட்டிற்குச் சென்று கத்தியை எடுத்து வந்து நான்கு வயது சிறுவனின் தொண்டைப் பகுதியில் ஆழமாக குத்தியுள்ளான். இதில், 4 வயது சிறுவன் பலத்த காயமாடைந்து மயங்கி விழுந்துள்ளார்.
இதைக் கண்ட பெற்றோர்கள் உடனடியாக அருகிலுள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்தனர். பின், மேல் கிசிச்சைக்காக மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டார். சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில்,
அடிபட்ட சிறுவனின் தாயார் முதலில் புகார் அளித்தார். பின், அவரது உறவினரும், கத்தியால் குத்திய சிறுவனின் தந்தை கேட்டுக் கொண்டதன் பேரில் புகாரை திரும்பப் பெற்றார். இந்தச் சம்பவம் குறித்து வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. மேலும், சிறுவனின் நிலைமைப் பொறுத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.