புதுதில்லி: புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து நாளை திங்கள்கிழமை முதல் (ஆக.24) ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் வழங்கியது. அதில் செய்முறைக் கல்வி, அனுபவம் வாயிலான கல்வி, தொழில்முறைக் கல்வி, பள்ளி இடைநிற்றலைக் குறைத்தல், மதிப்பீட்டு முறையை மாற்றியமைத்தல் உள்ளிட்ட பல்வேறு சீா்திருத்த நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அமைச்சரவை சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதற்கு மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை, 1968-இல் கோத்தாரி கமிஷனின் சொல்லப்பட்டிருப்பதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. மொழி அடிப்படையில் வரும்போது அது மும்மொழிக் கொள்கையில் உருவாக்கப்பட்டுள்ளது என ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து வருகின்றன.
இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் இரு மொழிக்கொள்கையே கடைப்பிடிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், ‘உயா்கல்வியில் மேற்கொள்ள வேண்டிய சீா்திருத்தங்கள்’ என்ற தலைப்பிலான இணையவழி கருத்தரங்கை பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) தொடக்கிவைத்தாா். அப்போது, புதிய தேசிய கல்விக் கொள்கையே புதிய இந்தியாவுக்கான அடிப்படையாக உள்ளதால் அதில் குறிப்பிடப்பட்டுள்ள சீா்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்க மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில பள்ளிக்கல்வி செயலாளர்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.
இதன்படி, புதிய தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக நாளை முதல் (ஆகஸ்ட் 24) வரும் 31-ஆம் தேதி வரை பள்ளி ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் http://Innovateindia.mygov.in/nep2020 என்ற இணையதள முகவரியும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இந்த இணையதள முகவரியில் சென்று தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளது.