கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.25 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்மா வங்கியை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க ஐசிஎம்ஆர் பரிந்துரை செய்துள்ளது. ஏற்கனவே சென்னையில் பிளாஸ்மா வங்கி தொடங்கப்பட்டு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்தப்படியாக கோவை அரசு மருத்துவமனையில் ரூ.25 லட்சம் மதிப்பில் பிளாஸ்மா வங்கி ஏற்படுத்தப்பட்டது. இதனை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார். உடன் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண் குமார் ஜடாவத், மருத்துவமனை முதல்வர் (பொறுப்பு) பொ.காளிதாஸ் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா நோய்த் தொற்று தடுப்பு பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.