தற்போதைய செய்திகள்

மூணாறு அருகே நிலச் சரிவு: மீட்பு பணி தற்காலிக நிறுத்தம்

21st Aug 2020 06:24 PM

ADVERTISEMENT

மூணாறு அருகே ராஜமலை, பெட்டிமுடியில் ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களை மீட்கும் பணி, அங்கு மோசமான வானிலை நிலவியதால் வெள்ளிக்கிழமை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் ராஜமலை அருகே பொட்டிமுடி பகுதியில் கடந்த ஆகஸ்ட் 6}ம் தேதி இரவு 1.30 மணிக்கு கன மழையால் நிலச் சரிவு ஏற்பட்டது. இதில், அங்குள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வந்த தமிழக தோட்டத் தொழிலாளர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 78 பேர், அவர்களது வீடுகளில் தங்கியிருந்த உறவினர்கள் 4 பேர் என மொத்தம் 82 பேர் சிக்கினர்.

நிலச் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் வியாழக்கிழமை வரை  மொத்தம் 65 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. 12 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 10 பேர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில், நிலச் சரிவு ஏற்பட்ட பெட்டி முடி பகுதி, அதையடுத்துள்ள கிராவல் பங்க், பூதக்குழி ஆகிய இடங்களில் உள்ள ஆற்றங்கரையோரப் பகுதிகளில் 15-வது நாளாக வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு மீட்பு பணி தொடங்கியது. ரேடார் கருவி மூலம் நடைபெற்ற தேடும் பணியில், உயிரிழந்தவர்களின் சடலம் எதுவும் மீட்கப்படவில்லை.

ADVERTISEMENT

தற்போது அப்பகுதிகளில் மோசமான வானிலை நிலவியதால் ரேடார் கருவி மூலம் தேடுதல் பணியை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், வன விலங்குகள் நடமாட்டம் உள்ள பூதக்குழி பகுதியில் இருண்ட வானிலை நிலவியதால்  அங்கு தேடும் பணியை தொடர்வது ஆபத்தானதாக அமையும் என்று என்று மீட்புப் படையினர் கருதினர். 

எனவே, பிற்பகல் 2 மணிக்கு மீட்பு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. நாளை (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு, எஞ்சிய 5 பேரின் சடலங்களை தேடும் பணி மீண்டும் தொடங்கும் என்று இடுக்கி மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் கூறினர்.

Tags : munnar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT