தற்போதைய செய்திகள்

பதவியை விட மதுரையின் வளர்ச்சி தான் முக்கியம்:  அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் 

21st Aug 2020 01:59 PM

ADVERTISEMENT

 

மதுரை: பதவியைவிட மதுரையின் வளர்ச்சி தான் முக்கியம் அதற்காகவே இரண்டாம் தலைநகர் கோரிக்கையை முன்வைத்திள்ளேன் என்று தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

மதுரையை  இரண்டாவது தலைநகராக அறிவிக்க வலியுறுத்தி தென்மாவட்ட வர்த்தக அமைப்புகள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் மதுரையில் தமழ்நாடு்தொழில் வர்த்தக சங்க அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு தொழில் வர்த்த சங்கம் ஏற்பாடு செய்திருந்த இக்கூட்டத்தில் பங்கேற்ற வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியது: 

ADVERTISEMENT

மதுரையை இரண்டாவது தலைநகராக்க வேண்டும் என்பது புதிய கோரிக்கை அல்ல,  20 ஆண்டு காலமாக நிலுவையில் உள்ளது. இக் கோரிக்கைக்கு சிலர் தகுதி இருக்கு என்கின்றனர். சிலர் இல்லை என்கிறார்கள். இருப்பினும் கருத்தை தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. 

சென்னை ஒரு தரப்பினருக்கு தலையாக உள்ளது. ஒரு தரப்பினருக்கு மிக நீண்ட தூரத்தில் உள்ளது. மதுரை இரண்டாம் தலைநகரம் என்ற விவாதத்தில் பலரும் புரிதல் இல்லாமலேயே பேசுகின்றனர். சென்னையில் இடமில்லாமல் காஞ்சிபுரம் , திருவள்ளூர் செங்கல்பட்டு என்று விரிவடைந்து கொண்டே செல்கிறது. தலைநகரம் என்பதால் வேறு வழியில்லாமல் சென்னை விரிவடைந்து செல்கிறது. இச்சூழலில் தான் இந்த கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.

இரண்டாவது தலைநகர் ஆக வேண்டும் என்பது மதுரை மக்களின் கோரிக்கை அல்ல , தென் மாவட்ட மக்களின் கோரிக்கை. 

அரசின் 25 துறைகளின் தலைநகராக மதுரை மாறும்போது இளைஞர்கள் பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். மதுரைக்கு சிறப்பு அந்தஸ்து இருந்தால் தான் தொழில் முதலீட்டை ஈர்க்க  முடியும்.  

தூத்துக்குடி துறைமுகத்தை முழுமையாக பயன்படுத்தினால் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும், அமைச்சரவைக் கூட்டங்களில் கோரிக்கை வைக்கவில்லை என்கிறார்கள். கோரிக்கை வைக்கும் இடம் எது என்பது முக்கியமில்லை.

முதலில் நான் சாமானியன் பிறகுதான் சட்டப்பேரவை உறுப்பினர், அமைச்சர் என்பதெல்லாம். வாக்காளராக எனது கோரிக்கை விவாதப் பொருளாக இருக்கலாம். ஆனால் நோக்கம் வளர்ச்சிக்கானது. 

மதுரை இரண்டாவது தலைநகராக வரும்போது மாவட்டங்களின் எண்ணிக்கையில் எல்லை பிரிக்கப்படுவதில்லை. சென்னைக்கும் சேர்த்து இரண்டாவது தலைநகராக மதுரை இருக்கும். மதுரைக்கும் தலைநகராக சென்னையாகத் தான் இருக்கும். நிர்வாகம் மட்டுமே பிரிக்கப்படும். 

ஆற்றல் சார்ந்த மனிதவளம் தென் தமிழகத்தில் தான் உள்ளது. கோரிக்கையை வைக்கும்போது பல்வேறு சவால்கள் வந்துதான் தீரும். அதைக் கடந்துதான் சாதிக்க வேண்டும். பதவியை முன்வைத்த கோரிக்கை அல்ல, பதவியை விட மதுரை வளர்ச்சி தான் முக்கியம். கோரிக்கையை வைத்து விட்டு பயந்து ஓட முடியாது, எதற்கும் தயாராகத்தான் இருக்கிறேன். ஒர்க் ஃப்ரம் ஹோம் போல ஒர்க் ஃப்ரம் மதுரை என்று தான் கோரிக்கை வைக்கிறோம். 

திருச்சியை 2-ஆவது தலைநகராக்க வேண்டும் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கோரிக்கை வைக்கிறார் என்றால் அது அவருக்கு வாக்களித்த மக்கள் சார்பாக வைக்கும் கோரிக்கை. அதற்கு அவருக்கு உரிமை உண்டு. இதை வைத்து மதுரைக்கும் திருச்சிக்கும் இடையே தேவையில்லாத பிரச்னையை உருவாக்க வேண்டாம் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார். 

Tags : Minister R.P. Udayakumar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT