தற்போதைய செய்திகள்

திமுக முன்னாள் அமைச்சர் ரகுமான் கான் காலமானார்

20th Aug 2020 10:14 AM

ADVERTISEMENT

 

 

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் ரகுமான் கான் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் வியாழக்கிழமை காலை காலமானார்.

ரகுமான் கானுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து சென்னையில் உள்ள அவரது வீட்டில் ஓய்வெடுத்து வீடு திரும்பினார். 

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று வியாழக்கிழமை காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 

ரகுமான் கான் மறைவு திமுகவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவையொட்டி தமிழகம் முழுவதும் திமுக கொடியை அரைக்கம்பத்தில் 3 நாள்களுக்கு பறக்க விடுமாறும், திமுக நிகழ்ச்சிகளை ஒத்திவைக்குமாறும் தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேடை பேச்சுகளில் வல்லவரான ரகுமான்கான் சொந்த ஊர் தேனி மாவட்டம் கம்பம். திமுகவின் சிறுபான்மை முகங்களில் ஒருவராக திகழ்ந்த இவர் திமுக சார்பில் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் 1977, 1980 மற்றும் 1984 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார். 1989 இல் சென்னை பூங்காநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1996 பேரவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று மறைந்த முதல்வர் கருணாநிதி அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

திமுகவின் தலைமை செய்தித் தொடர்பாளராகவும், உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினராகவும், தமிழக அரசின் சிறுசேமிப்பு திட்ட ஆலோசனை குழுவின் துணை தலைவராக இருமுறையும் பதவி வகித்தார். 

ரகுமான் கான் மறைவுக்கு திமுக உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT