புதுச்சேரி: வெங்கடேஸ்வர மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை கரோனா சிறப்பு மருத்துவமனையாக நியமித்து புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.டி.அருண் கூறுகையில்,
அரியூரில் உள்ள வெங்கடேஸ்வர மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் கரோனா சிறப்பு மருத்துவமனையாக நியமிக்கப்படுகிறது.
ஏற்கனவே, அரசு மருத்துவக் கல்லூரி கரோனா சிறப்பு மருத்துவமனையாக நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் கரோனா தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்களுக்கு சிகிச்சையளிக்க அறக்கட்டளைகள் / தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவமனையை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
தொடந்து தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருவதால் நெருக்கடியை சமாளிக்க மற்றொரு கரோனா சிறப்பு மருத்துவமனையின் தேவை இருப்பதாக மருத்துவத்துறை இயக்குநர் கூறியதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து அனுப்பும் நோயாளிகளை அனுமதிக்க வெங்கடேஸ்வர மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் முன்பே ஒப்புக்கொண்டாலும், சிகிச்சை அளிப்பதை கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து மறுத்து வருவதாக பலர் புகார் அளித்துள்ளனர்.
எனவே, தொற்றுநோய் சட்டம் 1897 மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 ஆகியவற்றின் கீழ் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியை நியமிக்கப்பட்ட கரோனா சிறப்பு மருத்துவமனையாக அறிவிப்பதாக மாவட்ட ஆட்சியர் டாக்டர்.டி.அருண் கூறினார்.