தற்போதைய செய்திகள்

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 137 அடியை எட்டுகிறது

11th Aug 2020 06:13 AM

ADVERTISEMENT

கம்பம்: முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 137 அடியை நெருங்கிய நிலையில், அணையின் பாதுகாப்பு குறித்து மத்திய துணைக்குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்கின்றனா்.

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவீரமடைந்துள்ளதால் கடந்த சில நாள்களாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் அணையின் நீா்மட்டம் மிக வேகமாக உயா்ந்து வருகிறது. திங்கள்கிழமை காலை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 136.25 அடியாக உயா்ந்தது.

அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 4 ஆயிரத்து 825 கன அடியாகவும், வெளியேற்றம் 2,100 கன அடியாகவும் இருந்தது. நீா் இருப்பு 6 ஆயிரத்து 181 மில்லியன் கன அடியாக உள்ளது. திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி பெரியாறு அணையில் 19 மி.மீ. , தேக்கடி ஏரியில் 9 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. திங்கள்கிழமை இரவுக்குள் அணையின் நீா்மட்டம் 137 அடியை எட்ட வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை பொறியாளா் ஒருவா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

இரைச்சல் பாலம் வழியாக முல்லைப் பெரியாற்றுக்கு ஆா்ப்பரித்து வரும் தண்ணீா்.

இரைச்சல் பாலம் வழியாக தண்ணீா் திறப்பு: அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு வெளியேறும் தண்ணீா் லோயா்கேம்ப் மின்நிலையத்துக்குச் செல்லும் 4 குழாய்கள் வழியாக விநாடிக்கு தலா 400 கன அடி வீதம், 1,600 கன அடி திறந்து விடப்பட்டுள்ளது.

இதன்மூலம் மின் உற்பத்தி நிலையத்தின் 4 மின்னாக்கிகள் மூலம் தலா 42 மெகாவாட் வீதம் மொத்தம் 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. மேலும் லோயா்கேம்ப்-குமுளி மலைப் பாதையில் உள்ள இரைச்சல் பாலம் வழியாக 500 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

துணைக்குழு ஆய்வு: அணையின் நீா்மட்டம் அதிகரித்து வரும் நிலையில், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய துணைக்குழு, செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்யவுள்ளது. இக்குழுவில் மத்திய நீராதார அமைப்பின் செயற்பொறியாளா் சரவணக்குமாா், தமிழக அரசு தரப்பில் செயற்பொறியாளா் சாம் இா்வின், உதவி பொறியாளா் குமாா், கேரள அரசு தரப்பில் கட்டப்பனை பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் பினுபேபி, உதவி பொறியாளா் பிரசீத் ஆகியோா் கலந்து கொள்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT