தற்போதைய செய்திகள்

கேரள நிலச்சரிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 27-ஆக உயர்வு

9th Aug 2020 12:30 PM

ADVERTISEMENT

இடுக்கி: கேரளத்தில் இடுக்கி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 27-ஆக அதிகரித்துள்ளது.

கேரளத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனிடையே இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ராஜமாலா பகுதியில் மழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் தங்கியிருந்த 82-க்கும் அதிகமான தொழிலாளர்கள் நிலச்சரிவில் சிக்கினர். நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன், மாநில காவல்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27-ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக இடுக்கி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ராஜமாலா நிலச்சரிவில் மேலும் ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. அவர் 34 வயதான அருண் மகேஸ்வர் என்று கண்டறியப்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கபப்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இதேபோன்று பிரதமர் நரேந்திர மோடியும் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT